பக்கம்:மருதநில மங்கை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184புலவர் கா. கோவிந்தன்


அதை அறிவிப்பாயாக!” என நையாண்டி கூறி வேண்டிக் கொண்டாள்.

தன்னை எள்ளி நகைக்குங்கால், முத்தையொத்த அவள் வெண்பற்களைக் கண்டு மகிழ்ந்த அவன், முதலில் அவள் பல்லழகைப் பாராட்டிவிட்டுப், “பெண்ணே ! நாம் மணம் செய்து கொண்ட காலத்தில், மணம் செய்து கோடற்குரிய காலம் இது என மணநாள் வைத்துக் கொடுத்த அக்கடவுளரே, நான் கண்ட கடவுளராகும். அவரிடத்திலேயே நான் தங்கி வந்தேன்,” என்று கூறினான்.

தான், அவன் தங்கியது பரத்தையர் சேரியில் என அறிவிக்கவும், அவன் அதை மறைத்து, மண நாள் வைத்துத் தந்த முனிவர் மனையில் தங்கிவந்தேன் எனக் கூறக்கேட்ட அவள், அதை ஏற்றுக் கொள்ளாத தன் நிலையை, “அன்ப! நீ கூறியது ஒக்கும்! ஒக்கும்!” என உடன்பாட்டு வாய்பாட்டால் கூறிவிட்டு, “எல்லா! கடவுளரைக் கண்டேன் எனக் கூறும் நீ, தலைநடுங்க, நாக்குழற நிற்கின்றனை, உன் தடுமாற்ற நிலையே, நீ கூறுவது பொய் என்பதைக் காட்டி விட்டது. உன் களவு வெளிப்பட்டு விட்டது, நீ கண்ட கடவுளர் யாவர் என்பதை, நான் உண்மையாகக் கூறுகிறேன், கேள்,” எனத் தோற்றுவாய் செய்து கொண்டு கூறத் தொடங்கினாள்.

கணவன் கண்டு தங்கிய கடவுளர் யார் என்பதை அவனுக்குக் காட்டத் தொடங்கியவள், “காதல! பார்த்தவர் உயிரைப் பறிக்கும் பேரழகுமிக்க வடிவோடும், விழுந்து முளைத்த பற்களைக் கொண்ட இளமையோடும் வந்து, உன்னைப் பெற்றுப் பேரின்பம் நுகரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/186&oldid=1130151" இலிருந்து மீள்விக்கப்பட்டது