பக்கம்:மருதநில மங்கை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை185


வேட்கையால், நீ செய்த குறியிடத்தே உன்னைக் கண்டு, உன்னோடு உன் மலை புகுந்த, பரத்தையராகிய கடவுளரைக் கண்டாயோ?” என்று வினாவ விரும்பியவள், அதை அவ்வாறே வெளிப்பட வினவாது, “அன்ப! பொருள் மீது கொண்ட ஆசையால், உன் மனம் விரும்பியதை யெல்லாம் வழங்கி ஆட்கொள்ளும் கடவுள், ஆசையை அடக்கும் ஆற்றலைப் பெற்றுத் தன்னைக் கண்டு வணங்கி வழிபடுவார்க்குப் பிறவிப் பெருநோயைப் போக்கும் அருட்டிருவோடு உன் இல்லம் புகுந்ததைக் கண்டாயோ?” எனப் பிறிதொன்றை வினாவுவாள் போல், வினாவினாள்.

“அன்ப! பார்த்தாரைத் தன் வயமாக்க வல்ல பார்வையோடு சென்று, நல்ல மணம் மிக்க குளிர்ந்த மயிர்ச் சாந்தமும், புழுகும் தடவி வாரி முடித்த கூந்தலில் காலையில் அணியும் அணிகளுக்கு ஏற்றவாறு நீ பறித்து அளித்த மலர்களைச் சூடி மகிழும் பரத்தையரைக் கண்டாயோ?” என்று கேட்கத் துணிந்தவள், “அன்ப! சாந்தும் புழுகும் சேர்ந்து நறுமணம் நாறும் மகளிர் கூந்தலில், அவர் நாளணிக்கேற்ற மலர் சூட்டி மகிழக் கருதும் உன் மனத்தை, அம்மலர் மாலைகளை, அருட்பார்வையால் அன்பர்களின் பிறவி நோயைப் போக்கும் தமக்குச் சூட்டுமாறு மாற்றிய கடவுளரைக் கண்டாயோ?” என்று கேட்டுத் தன் உட்கருத்தை உணர்த்தினாள்.

“அன்ப! புனலாடி, அதற்கேற்ற புத்தாடை அணிந்து, அழியா விரதம் மேற்கொண்டு, சென்று, சூரனைக் கொன்ற செவ்வேல் முருகனைப் பாடிப் பரவிப், பின்னர்த் தாம் உற்ற பெருங்காதலால், உன்னோடு, அம்முருகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/187&oldid=1130152" இலிருந்து மீள்விக்கப்பட்டது