பக்கம்:மருதநில மங்கை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை191


என்ன புண்ணியம் பண்ணினையோ?” எனக் கூறி வழி மறித்தான்,

‘இவன் ஒரு குறளன். அதை மறந்து என்னைக் கூனி எனக் கூறிப் பழிக்கின்றான். என்னே இவன் அறியாமை!’ என எண்ணிய அக்கூனி, எதிரில் வழிமறித்து நிற்கும் அக் குறளனைப் பார்த்து, “ஐயே!” என ஒலித்து இகழ்ந்துவிட்டு, “கண்ணால் காண ஒவ்வாத கட்டழகனே! குறளாய்ப் பிறத்தற்குரிய வாய்ப்பு அமைந்த நாழிகையில், ஆண்தலை கொண்டு வாழும் பறவைக்குப் பிள்ளையாய் வந்து பிறந்தவனே! நீ, ‘உன்னை விரும்புகிறேன்!’ என்று கூறி, என்னை எதிர் நின்று விலக்கினாய். உன்னைப் போலும் குறளர், என்னைத் தீண்டுதற்கும் உரியரோ? வழி விட்டு விலகி நில்!” எனக் கூறி, அவனைக் கடந்து செல்ல முற்பட்டாள்.

“உனக்கு என்னைத் தொடுதற்கும் உரிமை இல்லை!” என்று கூனி கூறக் கேட்ட குறளன் உள்ளம் குன்றிற்று. அந்நிலையே, கூனிக்கும் இத்தனை ஏற்றமோ எனவும் அவன் எண்ணினான். அதனால் அவளை நோக்கிக், “கூனி! கலப்பையில் கோக்கும் கொழுப்போல், ஓரிடத்தே கூன் போன்ற, ஓரிடம் முன்னே. வளைந்து முறித்துப் போட்டது போல் தோன்றும் உன் பேரழகால், நான் பொறுக்கலாகாக் காமநோயுற்றேன். அந்நோயைத் தாங்கி, உயிர் வாழும் ஆற்றலை நான் இழந்துவிட்டேன். என்மீது அன்பு கொண்டு அளித்தால் என் உயிர் வாழும். இன்றேல், அது இன்றே அழியும். ஆகவே, என்னை வாழ வைப்பதும், வாழாமற் செய்வதும் உன்பாடு!” என்று கூறி இரங்கி நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/193&oldid=1130160" இலிருந்து மீள்விக்கப்பட்டது