பக்கம்:மருதநில மங்கை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202புலவர் கா. கோவிந்தன்


தொடர்ந்து செய்த போரைக் கண்டு நின்றாய் என்றும் வேறு சிலர் வந்து கூறினர்,” என்று கூறி, அவன் கூறிய காடைப் போர்க் காட்சிகளைக் காட்டுவாள் போல், “அன்ப! நாள்தோறும் நீ புதிய புதிய பொருள்களைக் கொடுக்கப், பெற்ற அக்கொடையைப் பாராட்டித் தன் கையாழ் இசைத்து உன்னை மகிழ்வித்து, உன்னைவிட்டு நீங்கா உன் நிழல் போல் உன் பின் திரியும் பாணன், தன் யாழோசை கேட்டுத் தன் வயப்பட்ட பரத்தையரை, மேலும் இனியன பல கூறி அகப்படுத்திக் கொண்டுவந்து கொடுக்க, அப்புதிய பரத்தையரோடு கலவிப்போர் கண்டு களித்தாய். அப்போரில் நீ பட்ட புண்கள் இன்னமும் ஆறிற்றில.

“அன்ப! உன் ஒழுக்கக் கேட்டினை உணர்ந்த ஊரார் பழிப்பதையும் பொருட்படுத்தாது, அப்பரத்தையை உன் மார்பு மாலை மயங்குமாறு அணைத்துக் கொண்டு அன்பு காட்டிய நீ, அப்பரத்தையை அனுப்பி, வேறு சில பரத்தையரை அகப்படுத்தக் கருதினாயாக, அது கண்டு அவள் ஊட, அதைப் பொருட்படுத்தாதே, புதிய பரத்தையரைப் பெற்று மகிழ்ந்தனை. அதனால் உண்டான உன் உடற்புண்கள் இன்னும் ஆறவில்லை.

“மேலும், அன்ப! கலவிக் காலத்தில், பல்லாலும், நகத்தாலும், கன்னங்களில் பண்ணும் புண்கள், ஆழமாய்ப் பதியின் இவள் வருந்துவாள் என்று, அன்பால் அஞ்சும் நீ, புண் பண்ணாது, அவள் மேனியை மெல்லத் தடவிக் கொடுக்க, அதனால் ஆராமை கொண்ட அவள், ‘இவன் என்னை வருத்தி இன்பங் கொண்டிலனே!’ என எண்ணி ஏங்கி, உன்னோடு ஊட, அவள் உடல் தணித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/204&oldid=1130188" இலிருந்து மீள்விக்கப்பட்டது