பக்கம்:மருதநில மங்கை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை211


வாழ்க! அன்ப! மூங்கிலால் பண்ணிய நாழி உழக்கு போன்ற அளவு கருவிகளின் அடியை வண்ணத்தில் தோய்த்துத் தோய்த்து அழுத்தி அழகு செய்யப் பெற்ற குதிரையின் முதுகுபோல், உன் மேனியைக் கவ்விக் கவ்விப் புண்ணாக்கியதும் அக்குதிரைதானோ? சிறிதும் அச்சம் அற்று, அவ்வாறு கடித்து வடுப்படுத்திய அக்குதிரை பெரிதும் விஷம் போலும். அக் குதிரையை அடக்கி ஆளும் அன்ப! அதனால் அழிவுறாது நீ நெடிது வாழ்க!” என வாழ்த்துவாள்போல் பழித்தாள்.

அவள் ஆத்திரம் அம்மட்டோடு அடங்கவில்லை. மேலும் அவனைப் பார்த்து, “அன்ப! நீ ஏறித் திரிந்த குதிரை இது என்பதை அறிந்து கொண்டேன். அது ஓர் அழகிய நல்ல குதிரை என்பதையும் அறிந்தேன். ஆனால், அக்குதிரை உற்றாரும், பெற்றாரும், ஊராரும் கூடி மணம் செய்து தர, அறவழி நின்று பெற்ற பெருமையுடையதன்று. தன்னலம் நாடி உன் பின் திரியும் பாணன் தூதாகச் சென்று, சேரிப் பரத்தையர் சினந்து நோக்க, காற்றெனக் கடுகிக் கொணர்ந்தது அக்குதிரை. உன் உருவு நலத்தை அழிக்கும் கொடுமை மிக்க அக்குதிரை மீது ஏறித்திரிய எண்ணாதே. என் சொல் கேளாது, அக் குதிரையை அடக்கி ஆளும் சேவகனாய் வாழ்வதையே விரும்புவையாயின், ஈண்டு வாராது, யாண்டேனும் சென்று திரிக, அதன் மீது ஏறித்திரிய இன்றே செல்க. இமைப்பொழுதும் ஈண்டு நில்லற்க!” எனக் கூறிக் கடிந்தாள்.

"ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல நின்வாய்ச்சொல்;
பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை;
சாந்தழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/213&oldid=1130229" இலிருந்து மீள்விக்கப்பட்டது