பக்கம்:மருதநில மங்கை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222புலவர் கா. கோவிந்தன்


இன்பம் நுகர விரும்பும் அவன் ஆசை அறிந்த தேர்ப் பாகன், தன் தலைவன் விரும்பும் பரத்தையரைத் தேடிப் பிடித்து அவன் விரும்பும் காலத்தில், அவன் இருக்கும் இடத்திற்கு அழைத்து வரும் விரைவு கருதித் தேரைப் பூட்டுவிடாதே நிறுத்தி வைத்திருப்பதையும், அத்தேர் இரவுபகல் ஓயாது, ஊரைச் சுற்றிச் சுற்றி வருவதையும் கண்ட அவ்வூரார் ஒவ்வொருவர் வாயிலும், அவன் பரத்தையர் ஒழுக்கம் பற்றிய பேச்சே எழுந்தது. ஆற்றின் கரையிலும், உண்ணுநீர்த் துறையிலும், ஊர் மன்றிலும், அங்காடித் தெருவிலும் எங்கும் அப்பேச்சே பேசப்பட்டது. அவன் ஒழுக்கக் கேடு அறிந்த ஊரார் ஒவ்வொருவரும், அதை அவன் மனைவிபால் சென்று அறிவிக்க அறிவிக்க, அவள் துயர் மிகுந்தது. அதனால், அவன்மீது கடுஞ்சினம் கொண்டு வாழ்ந்திருந்தாள்.

அந் நிலையில் புனல் விழாவும் முடிவுற்றது. இளைஞனும் வீட்டிற்கு வந்தான். ஆனால், வந்தானுக்கு வழிவிட மறுத்தாள் அவன் மனைவி. வருக என வரவேற்காது, வழிமறித்து நின்றவாறே, “ஐய! ஈண்டு வந்து, என் மனைக்குள் புகும் நீ யார்? இங்கு வர உனக்கு என்ன உரிமை உன் ஒழுக்கக் கேட்டை ஊரார் உரைக்க முன்னரே அறிவேன். பரத்தையர் பின் திரியும் நீ, நாள் தோறும், உன்னை எவ்வாறு ஒப்பனை செய்து கொண்டு, அவர் முன் சென்று நிற்பாய் என்பதை, இப்போது, ஈங்கு வந்து என் முன் நிற்கும் கோலத்தால் அறிந்து உன் கள வொழுக்கத்தைக் கண்ணெதிரில் கண்டும் கொண்டேன். நீ என்னோடு உறவுடையன் அல்லை. உன் வருகை எனக்கு மன நிறைவைத் தாராது. மனை புகாது இதுகாறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/224&oldid=1130249" இலிருந்து மீள்விக்கப்பட்டது