பக்கம்:மருதநில மங்கை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை223


சென்றிருந்த இடத்திற்கே மீண்டு செல்க!” எனக் கூறி வழியடைத்தாள்.

மனைவியின் சினம் கண்ட இளைஞன் சிறிதும் மருளாதே, “ஆராய்ந்தெடுத்த மலர் கொண்டு தொடுத்த மாலையணிந்து அழகின் வடிவாய் என்முன் வந்து நிற்கும் மங்கை நல்லாய்!” எனப் பாராட்டி, அப்பாராட்டைக் கேட்டு, அவள் மனம் சிறிதே நெகிழ்ந்து நிற்கும் நிலை நோக்கிப், “பெண்னே! நான் செய்யாத எதை யெதையோ கூறி என்னைச் சினப்பது ஏனோ? உதிர்ந்து, படிந்த மலர்கள் தன்னை முழுவதும் மறைத்துக் கொள்ள இரு கரைகளையும் அழித்துப் பாய்ந்து வரும் வையை யாற்றில், புதுவெள்ளம் பெருக்கெடுத்தோடக் கண்டேன். அதில் ஆடி மகிழ ஆசை கொண்டது என் உள்ளம். அவ்வாசை தீர அதில் ஆடி மகிழ்ந்தேன். அதனால் என் வருகை தடைப்பட்டது. அதுவல்லது வேறு எதையும் அறியேன். நான் கூறுவது உண்மை. இதை உன் உள்ளம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்!” என்று கூறினான்.

“புனலாடி வந்தேன்!” எனக் கணவன் கூறக்கேட்ட அவள், “ஓ! அப்படியா !” எனத் தலையாட்டி வியப்பாள் போல் வினாவி, ‘அன்ப போன இடத்தில் நீ புனலாடினாய் என ஊரார் சிலர் வந்து உரைத்ததை நானும் கேட்டேன். ஆங்கு நீ ஆடிய புனல் எது என்பதையும் நான் அறிவேன். அடர்ந்தும், நீண்டும் அலை அலையாய்த் தொங்கும் அழகிய கூந்தலை, அறல் ஒழுகும் மணலாகவும், காண்பார் மனத்தை மருட்டும் மாட்சிமை மிக்க, மை தீட்டிய கண்களை, நீரில் நீந்தி விளையாடும் மீன்களாகவும், மலர்ந்த மலர்கள் உதிர்ந்து படிந்து மணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/225&oldid=1130250" இலிருந்து மீள்விக்கப்பட்டது