பக்கம்:மருதநில மங்கை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230புலவர் கா. கோவிந்தன்


நல்லரசன் என நாடு போற்றும் அவனிடத்துப், பரத்தையர் உறவு எனும் பொல்லா வொழுக்கம் புகுந்து விட்டது. தன் மனைவியை மறந்து, பரத்தையர் மனை புகுந்து வாழத் தொடங்கினான். அவன் ஒழுக்கக் கேடு கண்டு, உள்ளம் நொந்தாள் அவன் மனைவி. பிறைத் திங்கள்போல் பேரழகுடைய அவள் நெற்றி பசலை படர்ந்து ஒளி இழந்து போகப் பெரிதும் நடுக்கம் கொண்டாள். தன்னைப் பற்றி வருத்தும் காமநோயின் கொடுமை தாங்க மாட்டாத அவள், அந் நோயோடு வாழ்தலை, கணவனைப் பிரிந்து காதல் நோய் வருத்த வாழும்நாளை வெறுத்தாள். உள்ளக் கவலையால் அவள் உடல் நலம் இழந்தது. மூங்கில் போலும் அழகுடையவளாய் விளங்கிய அவள் தோள்கள் தளர்ந்து தம் வனப்பிழத்தன. இவ்வாறு வருந்திக் கிடந்தாள் அவள்.

அவள் துயர்க் கொடுமையைக் கண்டாள் அவள் தோழி. அரசன் இன்னும் சில நாள், இவ்வாறே பிரிந்து வாழின், இவள் வாழாள் என அறிந்தாள். அதனால் அரசன்பால் சென்று, அவனுக்கு இவள் நிலையைக் கூறி அழைத்து வருதல் வேண்டும் எனத் துணிந்தாள். உடனே அவனிருக்கும் இடம் சென்று அவனைக் கண்டாள். அரசியல் நூல்கள் பல கற்று, அவை கூறும் அறநெறி பிறழாது ஆளும் அவன் ஆட்சிச் சிறப்பைப் பாராட்டி வணங்கிய பின்னர், “அரசே! நீ ‘என் ஆட்சிக்கீழ் வாழ்வார் அனைவர்க்கும் அறமே வழங்குவேன். என் குடைநிழல், அனைவர்க்கும் அறமே வழங்கும். ஆகவே, உலகீர்! என் குடைக் கீழ், எல்லோரும் வந்தடைக!’ என விளங்கக் கூறி, வெண்கொற்றக் குடையினை விரித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/232&oldid=1130257" இலிருந்து மீள்விக்கப்பட்டது