பக்கம்:மருதநில மங்கை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை95


போனா, கவலையுற்றுக் கைவளை சோர மெலிந்து, கண்ணீர் விட்டுக் கலங்கும் அக்காட்சியைக் காண நேரின், கலங்குகிறது என் உள்ளம். ஐய! என் ஆருயிர் மகனே! கான இனிக்கும் கண்ணழகு வாய்ந்த நீ, ‘அத்தா! அத்தா!’ என்று வழங்கும் உன் இனிய மழலை மொழியைக் கேட்கக் கேட்க இனிக்கிறது. ஆனால், ஊரில் தப்பிப் பிழைத்தவர் ஒருவரும் இலர் என்று கூறுமாறு, உன் தந்தையால் நலன் இழந்து வருந்தும் மகளிரின், மனத் துயரைக் காணத் துன்புறுகிறது என் உள்ளம். உன் முகம் கண்டு, உன் மொழியைக் கேட்டு மகிழும் நான், அம்மகளிர் துன்ப நிலை கண்டு, துயர் உறுகிறேன். ‘வானத்தில் உலாவரும் வெண்திங்காள்! என் மகனுடன் ஆடவருக! இதோ என் மகன்!’ எனக் கூறி, உன்னை அம்புலிக்குக் காட்டி மகிழ இனிக்கிறது என் உள்ளம். ஆனால் உன் தந்தை விரும்பி நலன் நுகர்ந்த பின்னர் வெறுத்துக் கைவிடப் பெற்ற மகளிரின் பசந்த மேனியைப் பார்த்துப் பார்த்துப் பெருந்துயர் கொள்கிறது என் உள்ளம்!” என்று கூறி, மகனைப் பாராட்டுவாள் போல், கணவன் கொடுமைகளை அவன் கேட்குமாறு கூறிக் கண்டித்தாள்.

பின்னர், “மகன் வளர்ந்துவிட்டான். ஆகவே, அவன் அறியப் பிழை செய்தல் கூடாது. செய்யின் அவன் சிறுவான்!” என்பதைக் கணவனுக்கும், “குற்றம் புரிவார் பெற்ற தந்தையே யாயினும் அவரைத் தண்டித்தல் உன் கடன்!” என்பதை மகனுக்கும் கூற விரும்பினாள். உடனே மடியில் அமர்ந்திருந்த மகனை முன்னெடுத்து நிறுத்தினாள். பின்னர் அவனை நோக்கி, “மகனே! நீ என் காதில் அணிந்திருக்கும் குழையைக் கழற்றிச் செல்லுந்தோறும், உன்னை அன்பால் பற்றி, உன் தந்தை பிரிந்த துயரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/97&oldid=1129660" இலிருந்து மீள்விக்கப்பட்டது