பக்கம்:மருதநில மங்கை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96புலவர் கா. கோவிந்தன்


வாரி முடித்து மலர் சூட்டப் பெறாமல் வறிதே கிடக்கும் என் கூந்தல் கிடைந்தலையும் என் தோளில் உன்னை அமர்த்தி மகிழ்வேனே, அது ஏன் தெரியுமா? தோளில் அமர்ந்து, என் கூந்தலைப் பற்றி ஈர்த்து என்னைத் துன்புறுத்துவது போல், பரத்தை வீடு சென்று பழியோடு வரும் உன் தந்தை, உன்னை எடுத்து வாரி முத்தங் கொள்ளுங்கால், பரத்தையர் கண்டு மகிழ்க என அவன் மார்பில் அணிந்த மாலையைப் பற்றி ஈர்த்துப் பாழாக்க உன்னைப் பழக்குவதற்கே. அஃது அறிந்து அவ்வாறே நடப்பாயாக!” என்று கூறினாள். என்னே அவள் அறிவும் நெஞ்சத் துணிவும்!

“நயம்தலை மாறுவார் மாறுக, மாறாக்
கயம்தலை மின்னும் கதிர்விடு முக்காழ்ப்
பயந்தஎம் கண்ஆர யாம்கான நல்கித்
திகழ்ஒளி முத்துஅங்கு அரும்பாகத் தைஇப்,

பவழம் புனைந்த பருதி சுமப்பக் 5
கவழம் அறியாநின் கைபுனை வேழம்
புரிபுனை பூங்கயிற்றில் பைபய வாங்கி
அரிபுனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே,
வருக! எம்பாக மகன்!

கிளர்மணி ஆர்ப்பஆர்ப்பச் சாஅய்ச்சாஅய்ச்செல்லும் 10
தளர்நடை காண்டல் இனிது; மற்று இன்னாதே,
உளம்என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார்
வளைநெகிழ்பு யாம்காணுங் கால்.

ஐய! காமரு நோக்கினை, அத்தாஅத்தா என்னும்நின்
தேமொழி கேட்டல் இனிது, மற்று இன்னாதே, 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/98&oldid=1129661" இலிருந்து மீள்விக்கப்பட்டது