பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

79


நின்று கொண்டிருக்கின்றது. ஆஸ்லர் கண்டுபிடிப்புகள் மூலம்தான் புதிய மருத்துவ உலகம் தோற்றுவிக்கப்பட்டது. அவரது புதிய மருத்துவ முறைகள்தான் இன்றும் மருத்துவ உலகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது. மருத்துவ உலகின் மாற்றத்திற்கு, மறுமலர்ச்சிக்கு வில்லியம் ஆஸ்லர்தான் இன்றும் மகானாக காட்சி தருகிறார்.

மருத்துவ விஞ்ஞானியாக விளங்கிய வில்லியம் ஆஸ்லர்; தனது சொந்த பணத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்தவர்; எவரையும் சுடு சொல்லால் சுடமாட்டார்; இரக்க குணம் உடையவர்; குடிகாரர்கள் அவரிடம் குடிக்கக்கூட பணம் கேட்பார்கள். குடியை விட்டுவிட்டால் பணம் கொடுக்கிறேன் என்ற ஆணையைப் பெற்ற பின்பே, குடியர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பும் குணம் உடையவராக இருந்தார்.

இவ்வாறு பணம் பெற்ற ஒரு குடிகாரன், “தான் இறந்த பின்பு தனது ஈரலை ஆஸ்லருக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்யச் சொல்லுங்கள்” என்று எழுதிக் கொடுத்து விட்டே மருத்துவ மனையில் உயிர் நீத்தான் என்றால், ஆஸ்லரின் ஆராய்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது பாருங்கள். அவ்வாறு குடிக்காரர்களுக்கும் இரக்கம் காட்டியவர்.

வில்லியம் ஆஸ்லர் தனது இறுதிக் காலத்தில் எல்லாரிடமும் அன்போடும், மனித நேயத்தோடும் பழகினார். பிறருக்குத் தொல்லைகளையே கொடுத்து வாழ்ந்த அந்த மனிதகுல மேதை அவர் சாகும்போது மக்களைக் கண்ணிவிட வைத்த மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டே மறைந்தார்.

மருத்துவ மேதைகளில் இப்படிப்பட்ட உழைப்பாளரை, மறுமலர்ச்சி சுபாவம் உடையவரை, புதுமையான மருத்துவ முறைகளால் மக்கள் இதயத்தைக் கவர்ந்து பாராட்டு பெற்ற ஒரு கடமைக் கருணையாளரை, எதைச் செய்தாலும் அது தெய்வத் தொண்டு என்று போற்றிய கண்ணியமான மக்கள் மருத்துவச் சீலரை, உலகமே போற்றி புகழுமளவுக்கு மருத்துவஞானியாக உழைத்தவரை நாமும் போற்றிப் புகழ்வதுதானே மனிதநேயம்?