பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= – –-

ஒரு பகுதியினரும் வடமேற்கே அபிராமம் செல்லும் கீரனூர் பாதையில் சென்றனர்.

கிளர்ச்சிக்காரர்களின் கூட்டம் அபிராமம் சென்றடைந்ததும் அங்குள்ள கச்சேரியைத் தாக்கி, சிப்பாய்களது துப்பாக்கிகளைப் பறித்தனர். வீணாகக் கிளர்ச்சிக்காரர்களுடன் மோதிய ஒரு சிப்பாய் மட்டும் கொல்லப்பட்டார். அங்குள்ள கும்பெனியாரது கைத்தறித்துணிகள் கிட்டங்கியை அவர்கள் தாக்கினர். கூட்டத்தினரின் ஆவேசத்தைக்கண்டு அஞ்சியவாறு கிட்டங்கிக் காவலாளி ஓட்டம் பிடித்தான். தங்களுக்குத் தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு கிளர்ச்சிக்காரர்கள் கிட்டங்கிக்குத் தீ வைத்து அழித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தெற்கே நான்கு கல் தொலைவில் உள்ள கமுதிக்குச் சென்றனர்.

கமுதிப் பேட்டையில் இருந்த கும்பெனியாரது கச்சேரியைத் தாக்கியதுடன் கும்பெனியாரது தானியக் களஞ்சியங்களையும் சூறைபோட்டனர். கச்சேரியின் பொறுப்பில் இருந்த தாசில்தார் கும்பெனியாரது விசுவாசத்துடன் சற்றுக் கடுமையாக நடந்து கொண்டதால், கிளர்ச்சிக்காரர்கள் அவரைக் கைது செய்தனர். இந்தக் குழப்பத்தினுடே அகப்பட்டுக் கொண்ட தாசில்தாரது மருமகனுக்கும் அடிவயிற்றில் ஈட்டிக்காயம் ஏற்பட்டது. கச்சேரியில் இருந்த அனைத்து ஆயுதங்களும் கிளர்ச்சிக்காரர்கள் வசமாயின. கிளர்ச்சிக்காரர்களது இந்த நடவடிக்கை அடுத்தடுத்த நாட்களில் பல கிராமங்களுக்கும் பரவின. முதுகளத்துர் கச்சேரி தாக்குதலில் ஈடுபட்ட கிளர்ச்சிக்காரர்களது அணியில் துப்பாக்கி, வாள், வேலுடன் கலந்து கொண்ட எண்ணிக்கையினர் முன்னுாறு பேர் மட்டுமே.

ஆனால், இப்பொழுது பாப்பான்குளம், பள்ளிமடம் குண்டுக்குளம், பேரையூர் எனப் பல கிராம மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், நாட்டுப்பற்றுடனும் கும்பெனியாருக்கு எதிரான இந்த ஆயுதக் கிளர்ச்சியில் தாங்களாகவே முன்வந்து சேர்ந்து கொண்டனர்.