24 - =மறவர் சீமை
அலுவலகமாக மாறியது. சேது நாட்டில் கும்பெனியாரது ஆட்சி நடைபெற்றது. மக்கள் வெஞ்சினம் கொண்டனர். அவர்களது மூத்த குடிமகனைத் தண்டனைக் கைதி போல திருச்சிக் கோட்டைச் சிறையில் அடைத்துவிட்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல மறவர் சீமையெங்கும் பரவியது. கொடிய பஞ்சத்தினின்றும் விடுபடாத நிலையில். எவ்வித தீவிர நடவடிக்கையிலும் ஈடுபட இயலாத உறுதியற்ற நிலை குடி மக்களுக்கு.
நாட்கள் மெதுவாக உருண்டோடின. மறவர் சீமை மக்கள் சேதுபதி மன்னரை எப்படி விடுவிப்பது? மானமும் வீரமும் செறிந்த மறவர் சீமை மண்ணில் இருந்து அந்நிய மண்புழுக்களை எவ்விதம் அழித்து ஒழிப்பது? விடைகாண இயலாத இந்த வினாக்கள் அனைத்துக் குடிமக்களது சிந்தனையிலும் சுழன்று கொண்டே இருந்தன. ஆனால், சித்திரங்குடி சேர்வைக்காரன் என்பவனது சிந்தனைதான் செயல்திறன் மிக்கதாக் இருந்தது. இவர் சேதுபதி மன்னரது கோட்டைக்காவல் பணியை மேற்கொண்டு இருந்தவர். பிறந்த மண்ணின் பெருமையை உணர்ந்த பேராண்மையாளர். இறை பக்திக்கு அடுத்து ஏற்றமிகு மன்னர் மீது மாளாத பற்றும் விசுவாசமும் மிக்க இளைஞர். மன்னர் திருச்சிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட நாளிலிருந்து மன்னரது விடுதலையை எவ்விதம் பெறுவது என்ற கவலையில் காலத்தைக் கழித்தவர்.
தம்மைப் போன்று விசுவாசமிக்க ஒரு சிறு அணியுடன் திருச்சிராப்பள்ளி சென்றார். கோட்டைக்குள் பாதுகாவலில் இருக்கும் சேதுபதி மன்னரைத் தப்புவித்து இராமநாதபுரம் அழைத்து வருவது எனத் திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். சில நாட்கள் மிகுந்த துணிச்சலுடன் முயன்றும், பரங்கியரின் கடுமையான கோட்டைப் பாதுகாப்பு அவரது திட்டத்தை நிறைவேற்ற இயலாமல் செய்தது. இதனால் சோர்வடையாது ஊர் திரும்பியதும் கும்பெனியாரது கொடுமைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டினார். குடிமக்கள் செலுத்தி வந்த நிலத் தீர்வை குறைவாக இருப்பதாகக்