உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

77

வற்புறுத்தவே அதன் ஆசிரியனான அரசன், தமியர் உண்ணா மக்கள் தங்காலத்து மிக்கிருந்து உலக வாழ்க்கையினை அன்பினால் நடைபெறச் செய்த முதற்பெருஞ் செயலினை முதற்கட் கூறுவானாயினன். இதனால், அஞ்ஞான்றிருந்த அரசர்களும் அவரது செங்கோலரசின்கீழ் வைகிய வேளாண் மாந்தர்களும், உணவருந்துங்கால் எவரோடும் வேற்றுமையின்றி அன்பினால் அளவளாவி மகிழ்ந்திருந்தருந்திய நேய வாழ்க்கையின் முதன்மையுஞ் சிறப்பும் நன்கு புலனாகா நிற்கின்றன. அங்ஙனம் அவர் எல்லாரோடும் அளவளாவியது எதனாலென்றால், தம்மவரல்லாரை வெறுக்கும் ஆரியப் பார்ப்பனர் போலாது, அவர் எவரையும் வெறாது ஒழுகிய பெருங் குணத்தினாலேயாம் என்பது தெரிப்பான் “முனிவுஇலர்" என அவர்க்குரிய நல்லியல்பினை அரசன் அதன்பின் எடுத்துக் கூறினான். இனி, அஞ்ஞான்றை வேளாண்மாந்தர் பிறர் துயருறக் கண்டால், அது தீர்க்கும் வரையில் தாம் கண் துயிலாரென்பதும், மெய்ப்புகழ் விளைக்கும் ஓர் அரும்பெருஞ் செயலினைத் தமது உயிர் கொடுத்தாயினும் முடிப்பரென்பதும், பிறிதொரு செயல் பழியைத் தருவதாயின் உலகத்தையே அது செய்தற்குக் கூலியாகக் கொடுத்தாலும் அவரதனைச் செய்யா ரென்பதும், அதனால் அவர் மனக்கவலையே இல்லாத பேரின்ப வாழ்க்கையில் வாழ்ந்திருந்தன ரென்பதும், இங்ஙன மெல்லாந் தமக்கென்றே வாழாது பிறர்க்கென்றே வாழ்ந்த விழுமிய முயற்சியினரான வேளாண்மக்கள் உண்மையினாலே தான் இவ்வுலகம் இனிது நடவாநின்றதென்பதும் பாண்டி மன்னன் இளம்பெருவழுதியினால் மேலைச் செய்யுளில் எத்துணை அழகியவாக உருக்கமாக அடுத்தடுத்துச் சொல்லப் பட்டிருக்கின்றன!

இவ்வாறு அப் பண்டைநாள் வேளாண்மக்கள் குணமுஞ் செயலும் மேதக்கனவாயிருக்க, இஞ்ஞான்றை வேளாளர் இயற்கையுஞ் செய்கையும் எத்துணை மாறுபட்டனவாயிருக் கின்றன வென்பதையுஞ் சிறிது ஓர்ந்து பார்மின்கள்! “நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு, இனத்தியல்ப தாகும் அறிவு” என்று தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த படி, இந்நாள் உள்ள சைவவேளாளர்கள் தம்மை முகத்தெதிரே 'வைசியர்’ ‘க்ஷத்திரியர்' என்றுந் தம்மைக் காணாவிடத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/102&oldid=1579725" இலிருந்து மீள்விக்கப்பட்டது