உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

83

முயலும்வழித், தனக்குத் தலைவராயினாரோடுந், தன்னோடு உடன்முயல்வாரோடும் பழகும் நேரம் மிகச் சிறிதேயாகும்; அங்ஙனம் பழகுங்காலும் அவன் தன்னுள்ளத்தைத் திறந்து வைத்து அவரொடு பழகுதல் இயலாது; அல்லதூஉந், தன் தலைவர்களுந் தன்னோடு உடன் முயல்வாருந் தன்னொடு மாறுபட்டவராய் இருந்தால் அவரால் அவன் படுந்துன்பம் அளவிடப்படாததாய் இருக்கும். இவ்வாறெல்லாம் வெளியே பலவகை அல்லல் உழந்து, மாலைப்பொழுதில் அயர்ந்து அவாவுடன் தன் இல்லத்திற்குத் திரும்பும் அவ் வாடவன், தன் அழகிய இனிய கற்பிற்சிறந்த அறிவுடைமனையாளால் நகையரும்பு குளிர்முகத்தோடு அன்புடன் எதிரேற்கப் படுவனாயின், அவன் தான் வெளியே பட்ட துன்பங் களெல்லாம் மறந்து எத்துணை ஆறுதலுங் களிப்பும் மிக்கவனாய்த் தன் இல்லத்தின் உள்ளே சென்று வைகுவன்! இனி, அவ்வாறின்றி அவள் தன் கணவனைக் கண்டவுடன் தன் கடுகடுத்த முகத்தாலும் வெடுவெடுத்த சொல்லாலும் அருவருத்த நடையாலும் அவனைப் பேய்போல் வாட்டி வருத்துந் தீய இயற்கை யுடையவளாயின், முன்னமே வெளியில் அல்லற் பட்டுவந்த அவன் தன் வீட்டின் அகத்தும் அங்ஙனந் துன்புற்று, அதனாற் கவலையும் நோயுங்கொண்டு செந்நீர் நஞ்சாகி இளமை யிலேயே மூத்துப்போவன்; மூத்து விரைவிலும் மாண்டு போவன். இவ்வுண்மை யுணர்ந்தன்றே ஔவையார்,

"இல்லாள், வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறாய் விடும்”

என்றுந், திருவள்ளுவர்,

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனை மாட்சித் தாயினும் இல்”

என்றும்,

(குறள் 52)

“உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்

பாம்போ டுடனுறைந் தற்று”

(குறள் 890)

என்றும் அருளிச்செய்தனர். எனவே, ஆடவரும் மகளிரும் முதுமை எய்தாமல் நீண்டகாலம் இளமைச்செவ்வியுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/108&oldid=1579731" இலிருந்து மீள்விக்கப்பட்டது