உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் 10

“ஓங்குமலைப் பெருவிற் பாம்புநாண் கொளீஇ

ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்

பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த

கறைமிடற் றண்ணல்"

(புறநானூறு 55)

என்னும் பழைய பாட்டில் மதுரை மருதனிளநாகனார் குறிப்பிடுமாற்றானும், அங்ஙனமே கலித்தொகை என்னும்

பழந்தமிழ்ப் பெருநூலும்,

“தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின் மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக் கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கான் முகம்போல ஒண்கதிர் தெறுதலிற் சீறருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில் ஏறுபெற் றுதிர்வன"

(பாலைக்கலி, 1)

என்று மொழிந்திடுதலானும், பின்னர்க் காலங்கடோறும் வடவாரியர் செந்தமிழ்நாடு புகுந்து குடியேற அவர் வணங்கிய தெய்வங்களும், இத் தமிழகத்தார் வணங்கிய வேறு சில தெய்வங்களும் இங்குள்ளாராற் றொழப்படலானபோதும், அவ்வெல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக முக்கட் பெருமானே முதல்வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தமை,

“ஏற்றுவல னுயரிய எரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங்,

கடல்வளர் புரிவளை புரையு மேனி

அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்,

மண்ணுறு திருமணி புரையு மேனி

விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்,

மணிமயில் உயரிய மாறாவென்றிப்

பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனுமென

ஞாலங் காக்குங் கால முன்பிற்

றோலா நல்லிசை நால்வர்”

(புறநானூறு 56)

என மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் அருளிச் செய்திருக்கு மாற்றானும் நன்கறிகின்றன மல்லமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/117&oldid=1579741" இலிருந்து மீள்விக்கப்பட்டது