உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

95

பொதுவுரிமை பொருளற்றதா யிருக்கின்றது; ஏனெனில், தந்தையே யில்லாதபோது, புதல்வரென்னும் பெயரும், அவர் தமக்குள் நெருங்கிய உறவும், பொருளுக்குப் பொதுவுரிமையும் யாங்ஙனம் உண்டாம்? அவ்வவர் தேடும் பொருளும், அதற்காக அவ்வவர் செய்யும் முயற்சியும் பிறவு மெல்லாந் தனித்தனியே அவ்வவர்க்கே உரியவாகவன்றோ கொள்ளப்படும்? அங்ஙனங் கொள்ளப்படுங்கால் அவர் தம்முள் ஒருமித்து உறவாடி ஒருவர்க்கொருவர் உதவியாய் நின்று வாழ்க்கை நலங்களை ருங்கு நுகர்ந்தின்புற்றிருக்குமாறு யாங்ஙனம்? ஆதலாற், பௌத்தர்கள் பகருங் கடவுளைக் கைவிட்ட அறவாழ்க்கையும் பயன் றருவதாகக் காணப்பட வில்லை. இனிச், சமணர்களும் பௌத்தர்களைப் போலவே கடவுள் நம்பிக்கை இல்லாதவர் களாதலால், அவர்கள் கூறும் அறவுரையும் மக்களை ஒருங்கு கூட்டி உறவாடச்செய்ய மாட்டாதாயிருக்கின்றது. மற்றுக் கணியன் பூங்குன்றனாரும், இவரது காலத்தும், இவர்க்கு முற்பட்ட காலத்தும் இருந்த தமிழ்ச்சான்றோருந் தழீஇ யொழுகிய கோட்பாடோ பிறவாயாக்கைப் பெரியோனான முக்கட் பெருமானையே முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடும் நீர்மையது. அங்ஙனம் அம் முழுமுதற் கடவுள் வழிபாட்டில் உறைத்துநின்ற தமிழ்ச்சான்றோர்களே, தாமுந் தம்மையொத்த எல்லாநிலத்து மாந்தர்களும் மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களுங்கூட எல்லாம் அம்முதற் கடவுளாகிய ஒரு பெருந்தந்தைக்கு உரிமைப் புதல்வர்களேயாய் நிற்கு முண்மையை ஐயந்திரிபின்றி யுணர்ந்தவர்களாதலால், அவர்களியற்றிய நூல்களிலும் நூற்பாக்களிலும், மக்களுட் பிறப்பளவில் உயர்வுதாழ்வு கற்பிக்கும் போலி வேறுபாடு ஓரெட்டுணையுங் காணப்படுகின்றிலது. அதுமட்டுமோ, கல்வியும் பிறநலங்களுமெல்லாம் எல்லாரும் பெறுதற்கு ஒத்த உரிமையுடைய ரென்பதூஉம் அவரால் அவரியற்றிய நூல்களிலும் பாக்களிலும் அடிக்கடி வற்புறுத்துரைக்கப்பட்டு மிருக்கின்றது.

அப் பண்டைத் தமிழாசிரியர் கோட்பாட்டினையே ஒருங்கு தழீஇ அதனிற் சிறிதும் வழுவாதொழுகிய தெய்வத் திருவள்ளுவனாரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/120&oldid=1579745" இலிருந்து மீள்விக்கப்பட்டது