உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

99

தணிதலும் அவற்றோ ரன்ன” என்னும் மெய்யுரையால் அறிவுறுத் தருளினார். உலகிற் பெரும்பாலும் மாந்தர்க்கு வரும் மனநோய் உடல்நோய்கள் அவ்வவர் எண்ணும் எண்ணத்தாலுஞ் செய்யுஞ் செயலாலுமே வருகின்றனவென்பது, அவற்றின் காரணத்தை ஆராய்ந்து பார்ப்பவர்க்கெல்லாம் நன்கு விளங்கும். நல்லது வரினுந் தீயது வரினும் மனம் பொங்காதுங் கலங்காதும் அமைதியாயிருந்து உண்மகிழ்ந் திருத்தலிலேயே பழகி விடுவார்க்கு எத்தகைய மனநோயும் உடல்நோயும் வருவதில்லை; வேறு சில புறக்காரணங்களால் வரினும் ஒளிமுன்இருள்போல அவை மிகுவிரைவில் அகன்றொழியும். ஏனென்றால், நல்லெண்ணங்களிலேயே தோயப்பெற்ற மனமுடையார்க்கு அவரது முகத்திலே எல்லாரையும் எல்லா உயிர்களையும் இன்புறுத்தும் ஓர் அருளொளி தோன்றி மிளிர்ந்து கொண்டேயிருக்கும். அதனால், அவர்க்குத் தீதுசெய்ய வருவாரும், வரும் உயிர்களுங்கூட அவரை அணுகியவளவிலே தாங்கொண்ட தீயவெண்ணம் விலகி அவர்பால் அன்பு மீதூரப் பெறுவர். ஆகவே, ஒருவர் துன்புறுதற்கும், அது தீர்ந்து இன்புறுதற்கும் அவர்தாமே காரணராவரல்லது, பிறர் காரணராகாரென்றது வாய்மையே

யாம்.

அற்றேல், தீயது வரின் மங்காதும், நல்லது வரிற் பொங்கி வழியாதும் அமைதியாயிருந்து உண்மகிழ்ந் துயிர் வாழ்தற்கு வழியாதெனின்; அதனையும் ஆசிரியர் கணியன் பூங்குன்றனார் இயற்கை நிகழ்ச்சியில் வைத்து இனிதறிவுறுக்கின்றார். அவ்வியற்கை நிகழ்ச்சி யாவன; “சாதலும் புதுவதன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே” என்னும் அரிய தொடர் மொழிகளிற் காட்டப் பட்டனவேயாம். தமக்கு நெருங்கிய உறவினராவார் இறந்துபடுதல் கண்டு எவர்க்கும் ஆற்றொணாப் பெருந்துயர் உண்டாதல் காண்டுமாகலின், அத்துயர் தம்மால் வருவதல்லா தாய்த் தமக்குறவினராகிய பிறரால் வருவதன்றோவெனின்; அற்றன்று, அதுவுந் தம்மால் வருவதேயாம்; யாங்ஙனமெனிற் காட்டுதும். ஒருவர் தமக்கு உற்ற உறவினராவர் இறந்து பட்டவழி மனம் பிறிதுற்றுப் பெருந்துயர்கூர்ந்து நைந்தழக் காண்டுமேயல்லாமல், தமக்குறவினரல்லாத ஏதிலார் அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/124&oldid=1579749" இலிருந்து மீள்விக்கப்பட்டது