உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

107

சியூஸ்' (Zeus) என்றும், உரோமர் ‘சுபிதர் (Juiter) என்றுந் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றனர்; இப் பெயர்களெல்லாம் அம் மக்கள் தத்தம் மொழிகளிற் 'சிவன்' என்னும் பெயரைத் திரித்துப் பேசினமையாற் பிறந்தனவாகும்.

இனி, உருத்திரன் என்னும் பெயர் மாயைக்குள் நின்று அதனை இயக்கும் இறைவன் பெயராகும். இவ்விறைவன் முழுமுதற் கடவுளாகிய சிவத்தின் ஆணைவழி நின்று மாயையை இயக்குபவனேயன்றிச், சிவத்தின் ஆணையைக் கடந்து நிற்பவன் அல்லன்; ஆயினும், இவன் சிவத்திற்கு அணுக்கனாய்நிற்றலால் இவனை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் அத்தனையுஞ் சிவன் பாற் சேறல் பற்றி, இவனைச் சிவபிரானாகவே வைத்துத் தமிழ் அறிவு நூல்கள் நுவலாநிற்கும். இஃது ஆசிரியர் சிவஞான முனிவர், “கண்ணுதல் யோகிருப்ப" என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டின் உரையிற் "சீகண்டருத்திரர்க்குரிய வடிவங்களும் பெயர்களுந் தொழில்களும் முதல்வனுக்கும் ஒப்பவுள வென்பது வாயுசங்கிதையுட் கூறப்படுதலின், ஈண்டுக் கூறியன வெல்லாம் முதல்வனுக்குரியனவே யாமெனக் கொள்க” என்று கூறியவாற்றானுந் தெற்றென விளங்காநிற்கும்.

இங்ஙனம் மாயைக்குள் நின்று அதனை யியக்கும் இறைவனையும் அறியமாட்டாது, தம்மில் இறந்துபட்ட மறவர்களையே 'இந்திரன்,' ‘வருணன்’ ‘மித்திரன்' முதலிய தெய்வங்களாக வைத்து வெறியாட்டயர்ந்து வணங்கிய ஆரியர்க்கு மாயையைக் கடந்துநிற்கும் முழுமுதற் கடவுளாகிய சிவத்தை யறிதலும் வழுத்துதலும், இயலாமையிற், பண்டைத் தமிழாசிரியர் சிவபிரான் வழிபாட்டுக் குரிய பாட்டுகளை இருக்குவேதத்தின்கட் புகுத்தாமல், அவரதியற்கைக் கு ஒருவாற்றான் இசைந்த உருத்திர வணக்கவுரைகள் சிலவற்றை மட்டுமே அதன்கண் இடையிடையே நுழைத்துவைப்பா ராயினர். உருத்திர வழிபாடு பண்டை ஆரியர்க் குரியதல்லாமை, அவர் முன்னாளிற் சென்று குடியேறி வைகிய போகஸ்கோய் (Boghazkoi)' என்னும் மேல்நாட்டூரிற் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இந்திரன், வருணன், மித்திரன், நாசத்தியரே

அவர் வணங்கிய தெய்வங்களெனத் தெரிக்குமாற்றால் ஐயமின்றித் தெளியப்படும்; படவே, ஆரியர் இவ் விந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/132&oldid=1579757" இலிருந்து மீள்விக்கப்பட்டது