உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் - 10

மக்கள் இயல்புகளையேனும் பாடப்புகுந்தால், உண்மைக்கு மாறாகாமல் ஓவியம் வரைந்து காட்டினாற்போல் அவை தம்மை நம் அகக்கண்ணெதிரே விளங்கக் காட்டுவர். அவர் பாடிய தோற்றங்களையும் மாந்தர்தம் நிலைகளையும் நாம் நேரே சென்று காண்டல் கூடுமாயின், அவை அவர் பாடியவாறே க்கக்கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் எய்துவம். அவர் பாடியவெல்லாம் அங்ஙனம் பட்டாங்கு மொழியும் பெற்றியவாயிருத்தலைச் சில செய்யுட் காட்டி விளக்குவாம். காவற்பெண்டு எனப் பெயரிய நல்லிசைப் புலமைவாய்ந்த நங்கையாரை, அவர்க்கு நண்பரான மற்றொரு மாதரார் காணவந்துழிக், காணவந்த அவ்வம்மை தமதில்லினுள்ளே புகுந்து நின்ற பரிசும், நின்று தம் மகனைப்பற்றி அவர் உசாவிய பரிசும், அதற்கு அந்நங்கையார் கூறிய விடையும் விளங்க அக் காவற்பெண்டு என்னும் அவரே பாடிய செய்யுள் உருவிற் சிறிய தொன்றாயினுந் தன்னகத் தடங்கிய அப் பொருட் பொலிவால் எத்துணைப் பெரியதாய் இலங்குகின்றது! அது வருமாறு:

66

“சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்

யாண்டுள னோஎன வினவுதி: என்மகன்

யாண்டுள னாயினும் அறியேன்; ஒரும்

புலிசேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே!”

66

(புறநானூறு 86)

‘எனது சிறிய வீட்டிலே நிறுத்தப்பட்டிருக்கும் அழகிய தூணைப் பிடித்து நின்றுகொண்டு ‘நின்மகன் எவ்விடத்தே இருக்கின்றான்?' என என்னைக் கேட்கின்றாய்; என் மகன் எவ்விடத்தி லிருக்கின்றானாயினும் யான் அதனை அறியேன்; ஒரு புலியானது படுத்துக்கிடந்து பின் விட்டுப்போகிய மலை முழைஞ்சு (குகை) போல அவனைப் பெற்ற வயிறோ இது; என் மகனோ போர்க்களத்தின்கண்ணே காணப்படுவன்,” என்பது மேலைச் செய்யுளின் பொருளாகும். காவற்பெண்டு என்னும் புலவர் பெருமாட்டி ஆறடியில் அடக்கிப் பாடிய இவ் அகவற்பா எத்துணை அழகும் அறிவும் வாய்ந்து மிளிர்கின்றது. தம்மைக் காணவந்த மாது தமது இல்லிலே ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு நின்ற நிலையை முதலில் அறிவிக்கின்றார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/155&oldid=1579780" இலிருந்து மீள்விக்கப்பட்டது