உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

135

எதுவும், பிற்காலத்துத் தோன்றிய ‘கம்பராமாயணம்,’ ‘கந்த புராணம்’ ‘வில்லிபுத்தூரர்பாரதம்,’ “நைடதம் முதலியனவும், பெரியபுராணம் என்னுஞ் சுடரொளி ஞாயிற்றின்முன் மின்மினித்துணையும் விளங்காவென்பது நடுநின்று உண்மையை உள்ளவாறு ஆராய்வாரெவர்க்குந் தெற்றென விளங்கற் பாலதேயாம்.

மேலும், இடைக்காலத்தும் பிற்காலத்துந் தோன்றிய இந் நூல்கள் வர வர வடசொற்களை மிகுதியாய் எடுத்தாண்டு, பல்லாயிரந் தனிச் செந்தமிழ்ச் சொற்கள் வழக்கு வீழ்ந் தொழிதற்கும் இடஞ்செய்தன. இங்ஙனஞ் சொல்வகையாலும் பொருள் வகையாலுந் தமிழ்க்குந் தமிழ் மக்களது அறிவு விளக்கத்திற்கும் பேரிடர் பயப்பனவாயும் அவற்றைக் கவிந்த பொய்ந்நூல்களாயும் எழுந்த இருட்பெரும் பரவையினைக் கீழ்ந்த மெய்ந்நூல்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் என்னுஞ் செம்பொருட் செந்நூல்களேயாகும்; இவை தோன்றித் தஞ்செஞ்சுடர்க் கதிர்களை எங்கும் பரப்பிய தில்லையாயின், இத் தமிழ்நாடு பொய்யும் அறியாமையுமாகிய திண்ணிருளாற் கவரப்பட்டுத் தன் பண்டைநாகரிகத்தினை ஒருங்கே இழந்துபோயிருக்கும்! மற்று, அஃது அங்ஙனம் ஆகாமைப் பொருட்டு இம் மெய்ந்நூல்களை இதன்கண் இடையிடையே தோற்றுவித்த இறைவன் தன் அருட்டிறம் பெரிது! பெரிது!

அஃதொக்கும், பிற்காலத்துத் தோன்றிய பொருட் டொடர் நிலைகளிற் பெரும்பாலன உண்மையில் நடவாப் பொய்க் கதைகண்மேல் எழுந்தனவாயினும், அவையிற்றிற் காணப்படும் இலக்கியச் சுவை பயில்வார்க்கு இன்பம் பயத்தலின், அதுபற்றி அவை பாராட்டற் பாலனவல்லவோ வெனின்; அல்ல. அந் நூல்களை ஆக்கிய புலவர்கள் தாம் பாடுதற் கெடுத்துக்கொண்ட கதைகளில் மெய் இவை பொய் இவை யென்று ஆராய்ந்துரைத்தவரல்லர்; கதை பொய்யே யாயினும் அவற்றால் அறியப்படும் உறுதிப் பொருள்கள் வையென்பது தேற்றிப் பாடினவருமல்லர். பொய்யான கதைகளை ஆராயாது மெய்யெனக்கொண்டு தாம் நம்பிய தல்லாமலும், அவற்றைப் பயில்வார் கேட்பாரெல்லாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/160&oldid=1579785" இலிருந்து மீள்விக்கப்பட்டது