உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம் 10

அஃதொக்கும்; இடைக்காலத்துப் புலவர்கள் ஆக்கிய உதயணன் கதை, சூளாமணி' ‘சிந்தாமணி' முதலியனவுங் கட்டுக்கதைகண்மேல் எழுந்த பொருட்டொடர் நூல்களே யாதலால், அவைதம்மை விழுமியவெனத் தமிழ் வல்லார் கொண்டாடுதல் என்னையெனின்; அங்ஙனம் அவற்றைக் கொண்டாடுதல் அவை கூறுங் கதைக்காகவன்று; அக் கதைகளை மெய்யென நம்புவார் ஈண்டு யாரும் இலர்; மற்று, அவை தம்மை ஆக்கிய புலவர்கள் அந்நூல்களில் இலக்கியச் சுவைமுதிரத் தொடுக்கு மிடங்களிலெல்லாந், தொல்லாசிரியர் சென்ற நெறியே சென்று, பெரும்பாலும் இயற்கைக்கும் மக்களொழுகலாற்றிற்கும் முரணாகாத முறையிலேயே வைத்து அவைதம்மைப் புனைந்துரைத்தலால், அதுபற்றி அவையிற்றை அவர் கொண்டாடி வருகின்றனரென்க.

இங்ஙனமே, வடமொழியின்கண்ணுங் கதைகண்மேற் கட்டப்பட்ட சில காவியங்களும் நாடகங்களும் நடவாத நிகழ்ச்சிகளை நடப்பனபோல் வைத்துரைப்பினும், இலக்கியச் சுவை மலியக் கிளக்கு மிடங்களில்லாம் பெரும் பாலும் உலகவியற்கைக்கும் மக்களியற்கைக்கும் மலைவாகாத முறையில் வைத்தே அவைதம்மைப் புனைந்துசெல்லுதலால் அவையும் பாராட்டப் படுவனாவாயிருக்கின்றன. அத்தகைய வடநூல்கள் வடமொழியிற் காளிதாசர் என்னும் பெரும்புலவர் இயற்றிய சாகுந்தலம்,’ குமாரசம்பவம்' முதலியனவும்; பாரவி என்பார் இயற்றிய 'கிராதார்ச்சுரீயம்' முதலியனவும் ஆம். ன்னோரன்ன வடமொழி நூல்களைப் பின்றைத் தமிழ்ப்புலவ ரெவருந் தமிழில் மொழிபெயர்த்து வையாது, ஒருவகையினும் பாராட்டுதற் குரியவல்லாப் புராணங்களை மட்டும் அவர் கணக்கின்றிச் செய்துவைத்தது மிகவும் வருந்தற்பாலதே யாம்.

இன்னும், வடமொழியிற் பண்டைத் தமிழாசிரியர் ஆக்கிவைத்த பழைய உபநிடதங்கள், சாங்கியம், யோகம், நையாகிகம், வைசேடிகம்,வேதாந்தம் முதலான அறிவு நூல்களையும் பின்றைத் தமிழ்ப்புலவர் எவருந் தமிழில் மொழிபெயர்த்து வையாததும் பெரியதொரு குறைபாடே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/167&oldid=1579792" இலிருந்து மீள்விக்கப்பட்டது