உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

எந்நா ளாயினும் இரப்பவர்க் கிட்டுப் புலையுங் கொலையுங் களவுந் தவிர்ந்து நிலைபெற வறத்தின் நிற்பதை யறிந்து ஆணும் பெண்ணு மல்லதை யுணர்ந்து பேணி யுரைப்பது பிழையெனப் படாது சிறப்பும் சீலமு மல்லது

பிறப்புநலந் தருமோ பேதை யீரே.”

195

எனவும் போந்த அவ்வகவற் பகுதிகளைத் தமிழறிவுடை எவர்தாம் கபிலருடைய வல்லவென மறுக்க முந்துவார்? இவற்றின் செந்தமிழ் நடையருமையினையும் பொருட்பெருமை யினையும் வியவாதவர் தமிழறிந்தவ ரெனப்படுவரோ? தமிழ் நாவலமுடையீர் கூறுமின்!

இனித், திருமயிலையிற் பிறந்த ஆண்மகவை, ஆதிபகவர், ஆண்டுத் தம்மாட்டு மிக அன்புடையனாய் ஒழுகிய வேளாளத் திருமகன் ஒருவன் மகப்பேறின்றி உளம் புழுங்குதல் கண்டிரங்கி அவற்கே அதனை ஈந்து போயினார். அவ்வரிய ஆண்மகவைப் பெற்ற அவ்வேளாண்டிருமகன் அதனைப் பொன்போற் பொதிந்து போற்றுகின்ற நாளில், அவன்றன் உறவினர் பலரும், 'யாரோ இழிகுலத்தார் காமத்தாற் பெற்றுப் போட்ட அகதிப் பிள்ளையை இவர் வளர்க்கின்றார்; இஃதென்னை?' என்று பழி கூறுவாராயினர். அது கண்ட அத்திருமகன் மிகவருந்தி அம்மகவைப் பிரிதற்காற்றனாய்த் தன் விளைபுலத்தின் உழவு தொழில் செய்யும் பறைக் குடும்பத்திற்குக் குருவாய் உள்ள வள்ளுவனை அழைத்து அவன் கையிலதனை ஈந்து 'இதனைப் போற்றி வளர்க்க’ என்றுரைத்துப் பெரும் பொருட்டிரளும் நல்கினான். அரிய விழுப்பேறாயுள்ள அம்மகவையும் பொருட்டிரளையும் பெற்றுக் கொண்ட அவ்வள்ளுவன் தன் றவப் பெருமையை மிகவியந்து மகிழ்ந்து அம்மகவைக் கண்ணுங் கருத்துமாய் வளர்த்து வருவானாயினன்.

இங்ஙனம் வள்ளுவனாற் போற்றி வளர்க்கப்படுதலின் வள்ளுவப் பிள்ளை எனப் பலரானும் அழைக்கப் பெற்ற நம் ஆசிரியர் பருவம் முதிருந்தோறும் இயற்கைச் செவ்வறிவும், நூற்புலமையுங் கலைமதியென ஒருங்கு நிரம்பி விளங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/220&oldid=1579845" இலிருந்து மீள்விக்கப்பட்டது