உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் 10

தாங் கட்டிளமைப் பருவம் எய்து முன்னரே எல்லாம் வல்ல அருந்தமிழ்ச் செந்நாவன்மை முற்றப்பெற்று அருளிரக்கம் பொறுமை முதலிய குணமாட்சியாற்றிகழப் பெற்றார். பிற்றைஞான்று தம்மைக் காணப் போந்த ஆதிபகவரென்னும் பெற்றோருடன் அளவளாவி அவராற்றம் பிறப்பு வரலாறு முழுதுந் தேர்ந்து, தம்மைப் பெற்றாரிடத்தும் வளர்க்க வெடுத்த வேளாண் டிருமகனிடத்தும், வளர்த்து வந்த வள்ளுவனிடத்தும் பேரன்பும் பெருநன்றியும் பாராட்டினார். உயர்குண வொழுக்கங் களாற் சிறந்த தந் தந்தையார் புலைச்சியை மணந்தாரெனவும், தன்னைக் குழவிப் பருவத்தே வளர்க்க எடுத்த வேளாளன் இழிந்த அகதிப் பிள்ளையை ஏற்றமையாற் குலமிழிந்தான் எனவும், தம் வளர்ப்புத் தந்தை கல்வி யறிவு ஒழுக்கங்களாற் சிறப்புற்றிருந்துங் குலவிழிவு குறித்து அவனைத் தொடுதலுமாகா தெனவும் வையத்தார் பழியுரை மொழிந்து அலக்கணுறுவது அறிந்து அவர்க்கு மிக இரங்கினார். “என்னை! மக்களும் பிறவுயிரும் இறைவன் திருவருள் வெள்ளத்திற் கிடந்து அதனைப் பரு ருகி ஆக்கம் எய்தும் அவன் மக்களேயல்லவோ! அவன் அருட்டிருவை எய்துதற்கு உரிமையுடையரான இவர், தம்முள் வேற்றுமை கொண்டு சினம், பொறாமை, கொலை முதலிய தீய செயல்களைச் செய்து இடர்ப்பட்டு மக்கட் பிறவிப் பயனை இழந்து போகின்றனரே! இறைவன் திருவருட் பேரொளி ஒவ்வோர் அணுவினும் என்பில்லாத புழுவினும் ஊடுருவி நிறைந்து துளும்புகையில், இவ்வுயிர்கள் தம்முள் எவை உயர்ந்தன? எவை தாழ்ந்தன? பிறப்பு எல்லா உயிர்க்கும் ஒக்கும் அன்றே? உயிர்கள் தாம் முதல்வனுக்குப் புதல்வர்களாம் அருமையை உணராமையினன்றோ தம்மை மேலாகவும் பிறரைக் கீழாகவும் நினைக்கின்றனர்? உள்ளம் உருகி அன்பினால் ருமைப்படுவாராயின் தம் என்பையும் பிறர்க்கு உதவி அவரை இன்புறுத்துவர். அவ்வன்பு இல்வழித் தாமே நலம் பெற வண்ணுவர். ஒருவன் தன்னை உயர்வாகவும் பிறரை இழிவாகவுங் கருதுமிடத்துத் தான் செருக்குற்று அவர்பால் அன்பிலனா கின்றான். தன்னிற்றாழ்ந்தோன் கல்விப்பேற்றான் நன்கு மதிப்பு எய்துகின்றுழி அவன்மேல் அழுக்காறு எய்தி அவனைத் தாழ்த்துதற்கு வேண்டுந் தீச்செயல்கள் புரிய மனம் ஒருப்படு கின்றான். என்னே! என்னே! உடம்பினோடு அழிந்து போவதாய் வெறும் போலியாயுள்ள குலவேறுபாடு ஒன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/221&oldid=1579846" இலிருந்து மீள்விக்கப்பட்டது