உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

227

வாயிலைந் தவித்தான்’, ‘தனக்குவமையில்லாதான்”, ‘அறவாழி யந்தணன்,' 'எண்குணத்தான்' எனவும், பிற அதிகாரங்களில். “தெய்வந்தொழா அள்கொழுநற்றொழு தெழுவாள் பெய் யெனப்பெய்யு மழை,' ‘ஐயப்படாஅ தகத்த துணர்வானைத், தெய்வத்தோ டொப்பக் கொளல்”, காளல்", "குடி செய்வ "குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வம், மடிதற்றுத் தான்முந்துறும்' எனவுங்கூறி வற்புறுத்தாராகலின், கடவுள் உண்டென்று நாட்டுதலே ஆசிரியர்க்குப் பெருங் குறிப்பாயிற்று. அற்றன்று; திருவள்ளுவர் தம்முடைய அன்னை ஆதியையும் தந்தை பகவனையுங் கூறக்கருதி ‘ஆதிபகவன்' எனக் கூறியதே யல்லது அச்சொற்றொடராற் கடவுளைக் கூறக்கருதினாரல்லரெனின்;- அவ்வாறாயின், தம்முடைய தாய்தந்தையரை உலகிற்கெல்லாம் முதல்வரெனக் கூறல்பொருந்தாமையின் அதுகடாவன்றென மறுக்க.“அகரமுதல வெழுத்தெல்லாம்” என்னும் உவமை எடுத்துக்காட்டிப் பின் உலகிற்கெல்லாம் முழுமுதற் கடவுளுண்டென்று தெருட்டின அவ்வாக்கியத்திற்கு அங்ஙனம் பொருளுரைத்தல் போலியா மென்க. அல்லதங்ஙனம் அம்முதற் செய்யுளுக்கு மாத்திரம் உரை கூறின், அவ்வதிகாரத்தில் அக்கடவுளியல்பை விரித்த ஏனை ஒன்பது செய்யுட்களுக்கும் அங்ஙனமே பொருள் உரைத்த லாகாமையானும், 'தெய்வத்தோ டொப்பக் கொளல்' முதலாகப் பிறாண்டும் அவர் கூறும் அவ்வாக்கியங்க ளெல்லாம் கடவுளையே வெள்ளிடை மலைபோல் விளங்கக் காட்டுதலானும் அவ்வாறுரைத்தல் ஆசிரியர் கருத்துக்கு முற்றும் மாறுபாடாமென்றொழிக. மேலும், அச்சொற்றொடர் முடிபை இலக்கண நெறியால் நோக்கும் வழியும் அவ்வுரை பொருந்தாமை தெற்றெனப் புலப்படுகின்றது. இரண்டும் பலவுமாகிய உயர்திணைச் சொற்கள் இடையில் உம்மையின்றிப் புணர்ந்து நிற்குமாயின் அத்தொகைச் சொற்றொடர் பலர்பால் ஈற்றான் வழங்கப்படுமென ஆசிரியர் தொல்காப்பியனார், “உயர்திணை மருங்கினும்மைத் தொகையே, பலர் சொன்னடைத்தென மொழிமனார் புலவர்” என்று கூறினாராகலின், ஈண்டு 'ஆதி' ‘பகவன்’ என்னும் உயர்திணைச் சொற்கள் இரண்டும் இடையில் உம்மையின்றிப் புணருமாயின் ‘ஆதி பகவர்' என நிற்றல் வேண்டுமேயல்லது ‘ஆதி பகவன்' என ஆண்பாற்குரிய ஈற்றான் நிற்றல் சிறிதும் ஏலாதாம். ஆதலால், ஈண்டு ஆசிரியர் தந் தாய்தந்தையரைக் கூறக் கருதினா ரல்லரென்பதும், முதலில் நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/252&oldid=1579877" இலிருந்து மீள்விக்கப்பட்டது