உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

239

தேறும்? தேறும் சிறுவளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினாலொக்க. திரண்ட காப்பியங் களையெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டிய தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள். இச்சுருங்கிய திருக்குறள் நூலோ, உண்மையாய் நோக்கப் பரந்ததொரு வான்வெளியாம். இந்நூலிலடங்காத பொருளில்லை. எல்லாப் பொருளும் இதன்கண் அடங்கும். அவ்வாறாக, சொல்லாற் பரந்த பாவாலென் பயன்? வள்ளுவனார் சுரந்த பாவே வையத்துணையாம். அதிலும், ஓயாப் பிறவி பிறந்தெய்க்கும் இந்நிலையில் வாழ்க்கைக்குச் சொற் பரந்த பல நூல்களாலாவதென்னை? அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திய அருங்குறணூலே உறுதுணை.

இத்தகைய ஒரு நூலை இற்றைக் காலப் புதுக் கதைகளைப்போன்று ஓரிரவிலோ அன்றி ஈரிரவிலோ எழுதி முடித்தலியலுமோ? உலக வாழ்க்கையினியல்பு, உலகிடை அல்லற்படும் ஆருயிரியல்பு, அறியாமை, அறியாமை நீக்கம், இறைவனடி சேர்தல் ஆகிய அரும் பெரும் உண்மைகளைப் பன்முறை ஆய்ந்தாய்ந்து, பார்த்துப் பார்த்து, முடிபுகள் எய்த எய்த அவற்றைக் குறித்துக்கொண்டு வந்திருத்தலே இயல்பாகும். இளமை முதல் முதுமைவரை இதையொழிந்த வேறொன்றை எண்ணிப் பார்க்க ஆசிரியர்க்கு நேரம் இருந்திராது என்று கூறுதல் மிகையாமோ? ஜான் ஸ்டூவர்ட் மில் என்ற ஆங்கிலப் பேராசிரியர் "லிபர்ட்டி" (விடுதலை) என்ற ஒரு கட்டுரையை எழுதி முடிக்க ஏழாண்டுகள் ஆயினவென்றும், கிரை என்ற மற்றோராசிரியர் “எலிஜி” என்ற இரங்கற் பாவொன்றைப் பாடி முடிக்க ஏழெட்டாண்டுகள் ஆயிற்றென்றும் அறியின் மேற்கூறிய கூற்று மிகையாகாதென்பது எளிதில் விளங்கும். இதனைத் தெரிக்க ஒரே ஒரு சான்று யாதெனின், குறணூலிலுள்ள குறள்களில் யாதேனு மொன்றிலுள்ள ஒரு சொல்லை நீக்கி, எளிமையும், அழகும் பொருள் வளமும், இயைபும் கெடா வண்ணம் மற்றொரு சொல்லை யமைக்க முடியுமா? முடியாது என்பதேயாம். எனவே, இத்தகைய ஒரு நூலை ஒருவர் தம் ஆயுட்கால முழுதும் அரிதில் முயன்று திருத்தி அமைத்துள்ளார் என்பதில் காணக் கிடப்பதோர் இழுக்கில்லை யென்க. எனவே, மக்கள் வாழ்க்கைக்கு எவ்வாற்றானும் இந்நூலொன்றே சாலும்; இதற்கு மேலும் நுணுகிச் சென்று சிந்தித்து மகிழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/264&oldid=1579889" இலிருந்து மீள்விக்கப்பட்டது