உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் -10

விரும்புவோர்க்குத் திருவாசகம் ஒன்றுபோதும். இது புறனடை இத்திருத்தகு தெய்வத் திருமாமறை மதுரைக் கடைச்சங்கத் தரங்கேறியது குறித்தும் ஒரு கதை எழுந்துள்ளது. அரங்கேற்றற்குத் தலைமை தாங்கிக் கேட்டற்குரியார் உருத்திரசன்மர் ஒருவரே என்று ஓரசரீரி கூறிற்றாம். அவர் ஒரு குழந்தை யென்றும், மூங்கை யென்றும் நக்கீனாருரை கூறும். மூங்கையா யிருப்பானொருவன் இயற்கையாய்ச் செவிடாகவு மிருப்பானென்பதை நோக்குங்கால் களவியற் பாயிரக் கூற்று முழுவதும் நம்பத் தக்கதோ என்ற ஐயம் எழுகின்றது. எனினும், உடனிருந்து தலைமை தாங்கிக் கேட்ட ஒருவர் ஓரளவிற்குத் தெய்வத் தன்மை வாய்ந்தவராயிருந்திருத்தல் வேண்டும் என்பதை மட்டும் உண்மைக்குப் புறம்பின்றி உய்த்துணரலாம்.

இதுபோன்றே சங்கத்துத் தலைமை தாங்கி நூல் கேட்கும் கூலவாணிகன் சாத்தனார் தாம் கேட்கும் நூல்களிற் குற்றங் கண்டபோதெல்லாம் எழுத்தாணி கொண்டு தம் தலையிற் குத்திக் கொள்வர் என்றும்; அதனாற் சீழ்ப்படுத்த தலையுடையவராய் அவர் சீத்தலைச் சாத்தனார் என்னும் பெயர் பெற்றார் என்றும் வழங்கும் கதையும் நம்பத் தகுந்ததாய்த் தோற்றவில்லை. அதிலும், சீத்தலை என்பது ஓரூரென்பதையும், சீழ் கொண்டதலை சீழ்த்தலையாகுமே யன்றிச் சீத்தலையாமாறில்லை என்பதையும் நோக்குங்கால் கொண்ட ஐயம் வலுப்பெறுமேயன்றிக் குறையு மாறில்லை. ஆயின், “சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேனளாய்” என்ற பாட்டில் உள்ளுறை உண்மையேதும் இல்லையோ எனின், உண்டு. சாத்தனார்க்கு உண்மையாகத் தலைக்குத்து என்னும் நோயிருந்திருந்தால், அந்நோய் அறிவு நிரம்பிய திருக்குறணூலைப் படிக்கக் கேட்டவளவானே நீங்கிற்று என்பதே அவ்வுண்மை யாதல் வேண்டும். மருந்தால் தீராத நோய்களை நூற்களைப் படித்தலினால் தீர்த்து வைக்கும் முறை அமெரிக்கா நாட்டில் இன்றும் கையாளப் பட்டு வருதல் பலரறிந்த தொன்றாகும். படிக்கக் கேட்கும் நூலிலுள்ள பொருளில், கேட்கும் நோயாளியின் அறிவு சென்று பதிந்துறைவதால் கொண்ட நோய் மறைந்தொழிகிறது என்பதே அம்முறையின் அடிப்படையான கொள்கை. இசை பாடுவதாலும், கடவுளைப் பராய்ப் பாடுவதாலும் உடல்நோய் தீரக் காண்டற்கும் இதுவே அடிப்படையாகும். எனவே, செந்தமிழாகிய திருக்குறள் தேன் காதுகளில் நுழையவே சாத்தற்குத் தலைக்குத்துத் தீர்ந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/265&oldid=1579890" இலிருந்து மீள்விக்கப்பட்டது