உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

243

நூற்றுக்கு மேலும் வயது சென்றும் உயிர் வாழ்ந்திருப்பதாகக் கேட்கவில்லையா? சீனநாட்டில் ஒருவர் 340 ஆண்டுகள் உயிருடனிருக்கவில்லையா? “சந்ததமும் இளமையோடிருக்க லாம்" என்று தாயுமானர் அறுதியிட்டுக் கூறவில்லையா? முதுமை என்பது உண்மையில் முறைகேடான வாழ்வினால் எய்துவதொன்றே அன்றோ? முதுமை யெய்தின் சாவு பின் தொடரும் என்பதைக் கேட்கவும் வேண்டுமோ? எனவே, தாம் சொல்லியபடி உண்மையில் நடந்து காட்டும் பேராற்றல் வாய்ந்த நம்மாசிரியர் எண்பது முதல் நூறு ஆண்டுகள் வரையேனும் உயிர் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்று கொள்வதில் காணக்கிடப்ப தோர் இழுக்கில்லை. இவ்வளவே நம் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்து உய்த்துணரக் கூடியனவாம்.

இனி, நூலைப்பற்றி ஒரு சிறிது விளக்கிக் கூறி என் தலைமை யுரையை முடிப்பேன். முப்பால் என்றது அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பால்களை என யாவரும் எளிதிலுணரக் கூடும். அம்மூன்றையும் பற்றி இந்நூல் என்ன கூறுகிறது என்றாலோ, யாவரும் அறிந்த உண்மைகளையே திருத்தமாகக் கூறுகிறது. இதிலென்ன வியப்பு என்று கேட்கலாம். தெரிந்த ஒரு பொருளை விளக்கிக் கூறுவது எளிதன்று. அவ்வரிய செயலைச் செவ்வனே செய்து முடித்ததே ஆசிரியர் பெருமையாகும். ஒரு மாணவன் “திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்ற முப்பாலைப் பற்றிக் கூறுகின்றது என்றீர்களே! அறம் என்றால் தர்மந்தானே?” என்று கேட்டான். அதற்கு ஓராசிரியர் “அறம் தர்மம் என்று வடசொல்லாற் குறிக்கப்படும் பொருளை மட்டுங் குறிப்பதன்று. சிறந்த பொருளை உட்கொண்டிருக்கும் அறம் என்ற தமிழ்ச் சொல் குறிப்பது “நல்ல ஒழுகலாறு என்பதாம்" என்றார். “நல்ல ஒழுகலாறு என்றால் அஃதென்ன?" என்று மடக்கினான் மாணவன்; மறுமொழி கூறாது திகைத்தார் அவ்வாசிரியர். தெரிந்த ஒரு பொருளை விளக்கிக் கூற முடியாமல் விழிப்பதைப் பலர்மாட்டும் இன்றுங் காணலியற்கை.

அறம் என்பது இரவலர்க்குப் பொருளீயும் ஈகை மட்டுமன்று,

66

'அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொ னான்கு மிழுக்கா வியன்ற தறம்”.

(குறள் 35)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/268&oldid=1579893" இலிருந்து மீள்விக்கப்பட்டது