உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

11

ஏமாற்றம் அடைந்தவராகவே காணப்படுகின்றனர்; அல்லதூஉம் இற்றைக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட அவர்தம் முன்னோர் சிலரும் வடமொழியிலுள்ள 'மாபாரதம் இராமாயணம்' முதலான சில நூல்களை மொழிபெயர்த் துரைத்தவர்களே யல்லாமல், ‘திருக்குறள்’ ‘நாலடியார்’ 'சிலப்பதிகாரம்’ ‘திருவாசகம்' 'திருக்கோவையார்’ முதலான தனித்தமிழ் நூல்களைப்போல் எவையுஞ் செய்தவர் அல்லர். ஆகவே, தம் முன்னோரின் நிலைகளை யுணர்ந்து, அவ் வுணர்ச்சி வலியால் தமது நிகழ்கால வாழ்க்கையைச் சீர்திருத்தி, வருங்காலத்தில் தமது வாழ்க்கையை மேன்மேற் சுடர்ந் தொளிரச் செய்யவல்ல தகுதிவாய்ந்தவர் தமிழரும் ஆங்கிலரு மாகவேயிருத்தல் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதாகும். இவ்விருவேறு வகுப்பினருள் ஆங்கிலர் தமது வாழ்க்கையைப் பலதுறையிலுஞ் சிறந்தெழச்செய்து, ஏனையெல்லாரிலும் அது மிக்கோங்கி ஒளிவீசத் திகழ்தலால், அவரைப் பற்றி நாம் இங்குப் பேசுதல்வேண்டா. மற்று, நந்தமிழ் மக்களிலோ அவர்போல் மேன்மேல் உயருந் தகுதி வாய்க்கப் பெற்றிருந்தும் அதனாற் பயன்பெறாதாரே மிகப் பலராயும், பயன்பெறுகுநர் மிகச் சிலராயும் ஆங்காங்கு ஒளி குறைந்து மின்மினியெனக் காணப்படுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/36&oldid=1579658" இலிருந்து மீள்விக்கப்பட்டது