உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் 10

என்றற் றொடக்கத்துத் திருக்குறட்பாவின் பொருள்களை அறியாதார் இஞ்ஞான்று தமிழ்மக்களில் எவரேனும் உளரோ? ஆனால், இச் செய்யுட்களில் வந்த சொற்கள் ஒவ்வொன்றும் நாளடைவில் வடிவு திரிந்து வேறுபட, அதனோடு அயன் மொழிச் சொற்களுங் கலந்து நந்தமிழ் மொழி வேறொரு மொழியாய் மாறுபடின், அதனைப் பேசுந் தீவினையுடைய நாம் நம் அருமைத் திருக்குறளை இன்று போல் எளிதில் அறிதல் கூடுமோ? உணர்ந்து பார்மின்கள்! இத்தகைய துயர்பட்ட நிலையன்றோ நம் பண்டைத் தமிழரினத்தைச் சேர்ந்தவர்களான மலையாளர் தெலுங்கர் கன்னடர் முதலாயினாரெல்லாம் இப்போதிருக்கின்றனர்? பண்டை நம் ஆசிரியர் நிறுத்திய இலக்கண இலக்கிய வரம்பில் நில்லாது, இத் தமிழ் மக்கட் பிரிவினர் நம் தமிழ்ச் சொற்களைத் தாம் வேண்டிய வேண்டிய படி யெல்லாந் திரித்துக் கொண்டு சென்றதல்லாமலும் வடமொழிச் சொற்களையும் வரை துறையின்றிச் சேர்த்து வழங்கிவந்தமையாலன்றோ, பண்டு தமிழாயிருந்த ஒரு மொழியே இப்போது மலையாளந் தெலுங்கு கன்னடம் முதலிய பல மொழிகளாய்ப் பிரிந்து போக, அவற்றை வழங்கும் பழந்தமிழ் மக்களும் பல வகுப்பினராய்ப் பிளவுபட்டு, ஒருவர் மொழியினை மற்றவர் அறியாராய்க் குறுகிப் போயதனா லன்றோ, இவரெல்லார்க்குந் தாயகமான தமிழ்மொழிக்கண் உள்ள சீரிய தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், திருக்கோவையார் முதலான அரும்பெறல் நூல்களையும் அவரெல்லாம் அறியமாட்டாதவராயினர்! ஒருமொழி பலமொழியாவது அம் மொழித் சொற்கள் திரிபடைதலினாலே யாம்; ஒரு மக்கட் கூட்டத்தவராய் ஒற்றுமையும் வலிமையுங் கொண்டு வாழ்ந்தவர், பல வேறு மக்கட்பகுப்பினராய்ப் பிளவுபட்டு ஒற்றுமையும் வலிமையும் இழந்து வறுமைப்பட்டுத் தாழ்வது அவர் தமது பண்டைமொழிச் சொற்களைப் பலவாறு திரித்துப் பேசி அயன்மொழிச் சொற்களையும் எடுத்துச் சேர்த்து வழங்குதலினாலேயாம். பார்மின்! பண்டு ஒருமொழி பேசிய ஒரு மக்கட் பெருங்கூட்டமாயிருந்த தமிழரே, இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகம், தோடம், கோடம், கோண்டம், கொண்டம், ஒரம், இராசமாலம் முதலான பன்மொழிபேசும் பலவகை மக்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/55&oldid=1579677" இலிருந்து மீள்விக்கப்பட்டது