உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் -10

ம்

நம் பழைய பேராசிரியர் நம் ஆருயிர்த் தமிழன்னையை எவ்வளவு கருத்தாய், எவ்வளவு அன்பாய்ப் பாதுகாத்து நின்றனர் என்பது தெற்றென விளங்காநிற்கும். முன்னாசிரியர் நூல்களில் நூற்றுக்கு ஒன்று இரண்டு விழுக்காடு கூட வடசொற்களைக் காண்டலரிது.

இனி, இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன்னிருந்த தொல்லாசிரியர் ஆணைவழியே, அவர்க்குப்பின் இடைப்பட்டகாலத்திற் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார் முதலான விழுமிய நூல்கள் இயற்றிய ஆசிரியர்களும், அவர்களுக்குப்பின் புறப்பொருள் வெண்பாமாலை, பெருங்கதை, கல்லாடம், சூளாமணி, சீவக சிந்தாமணி, தேவாரம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், பெரிய புராணம் முதலான நூல்கள் இயற்றியருளிய ஆசிரியர்களுந் தமது செந்தமிழ்மொழியைத் தம்மால் இயன்றமட்டுந் தூயதாய் எவ்வளவு பாதுகாத்து வழங்கியுள்ளனர் என்பது அவையிற்றைச் சிறிதாராய்ந்து பயில்வாரும் நன்கறிவர், இடைக்காலத்திருந்த இவ்வாசிரியர் தமது காலத்திற் தமிழ்நாட்டிற் புகுந்த பௌத்த சமண்கோட்பாடுகளைத் தழுவியும் மறுத்துந், தமக்குரிய சைவ வைணவக்கோட்பாடுகளை ஆராய்ந்து நிறுவல் வேண்டி னமையிற், புதிதுபுகுந்த பௌத்த சமணர் வழங்கிய வட சொற்கள் குறியீடுகள் வழக்குகள் கதைகள் முதலியவைகளை அங்ஙனமே எடுத்தும் அவற்றையொப்பத் தாமுஞ் சிலபல படைத்தும் முன்வழங்கியவைகளை மாற்றியும் நூல்கள் யாக்கலாயினர். அங்ஙனம் யாத்த நூல்களில் மட்டுமே நூற்றுக்கு ஏழுமுதற் பத்து விழுக்காடு வடசொற்கள் புகுந்து கலப்பவாயின. மற்றுச், சமயப்பொருள் தழுவாத இவ்விடைக் காலத்து நூல்களிலுங் கூட நூற்றுக்கு மூன்று நான்கிற்குமேல் வடசொற்கள் கலந்தில.

இனி, இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முன்னிருந்து கடைக்காலத்திற்றோன்றிய சிவஞானபோதம் முதலான பதினான்கு சித்தாந்த நூல்களிலும், இராமாயணம், பாரதம், காந்தம் முதலான மொழிபெயர்ப்பு நூல்களிலும் நூற்றுக்கு ஏழு முதற் பன்னிரண்டு விழுக்காடே வடசொற்கள் கலந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/57&oldid=1579679" இலிருந்து மீள்விக்கப்பட்டது