உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

83

அதனால் மிகுந்த நாணத்தினாலே உள்ளங்கலங்குகின்றார் என்றவாறு.

சிறப்பணி கலன்கள் வெறுப்புடன் நீக்கி

இடதுகை முன்பொற் கடகம் பிணைந்தும்

நெட்டுயிர்ப் பெறிதலிற் றுப்பிதழ் விளர்த்துந்

துயிலா திருத்தலிற் பயில்விழி யிடுகியும்

உடல்மிக மெலிவுற லாயினுஞ் சுடர்மணி

தேய்த்தொறுந் தேய்த்தொறும் வாய்த்துருக் குறைந்து

நிறமிக வுறுதல் போல

இறைவன் மேனியும் ஒளியா னாதே.

-

(39)

-

(இ-ள்) சிறப்பு அணிகலங்கள் வெறுப்புடன் நீக்கி சிறப்புடையவான நகைகளை வெறுப்பொடு களைந்துவிட்டு, இடதுகை முன் பொன்கடகம் பிணைந்தும் இடது முன்கையிற் - பொன்னாற் செய்த கைவளையைக் கட்டியும், நெடு உயிர்ப்பு எறிதலின் துப்பு இதழ் விளர்த்தும் பெருமூச்சு விடுதலாற் பவளம்போற் சிவந்த இதழ் வெளுப்படைந்தும், துயிலாது ருத்தலின் பயில்விழி இடுகியும் - உறங்காமல் இருத்தலால் எந்நேரமுந் திறந்திருக்கின்ற கண்கள் ஒடுங்கியும், உடல் மிக மெலிவுறலாயினும் - உடம்பு மிகவும் மெலிவடைந்ததாயினும், சுடர்மணி தேய்த்தொறும் தேய்த்தொறும் - ஒளிவிடும் ஒரு மணியை (இரத்தினத்தை)த் தேய்க்குந்தோறுந் தேய்க்குந்தோறும், வாய்த்த உருக்குறைந்து நிறம் மிக உறுதல்போல - தனக்கு இயற்கையாகப் பொருந்திய வடிவின் அளவு குறைந்தாலும் அது தன் ஒளியின் நிறம்மிகப் பெறுதல்போல, இறைவன் மேனியும் ஒளி ஆனாது - அரசனது உடம்பின் நிறமும் ஒளியிற் குறையாது என்றவாறு. ஏ : அசை. வலதுகையிலிட வேண்டிய கடகத்தை அரசன் இடதுகையி லிட்டது, பிறழ்ந்த அவனது மனநிலையைக் குறிக்கின்றது.

-

துறவி மகள் மேல்வைத்த தொல்காதல் மறைத்த மறதியெனும் இருள்நெஞ்சை மற்றகன்ற பின்னே

உறவருந்து மெனைக்குறியிட் டுலைப்பதற்கு மதனன்

நிறமாவின் முகையைவில்லில் நிறுத்துகின்றான் என்னே!

(40)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/116&oldid=1580073" இலிருந்து மீள்விக்கப்பட்டது