உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் – 11 11 ✰

மக்களையும் ஒக்கலையும் தூய பைந்தமிழ்ச் சுவையை நுகரும்படி செய்து வழி காட்டியவர் நம் அடிகளார்.

பொழுது புலர்ந்ததும் அடிகளாரிடம் குடிகொண்டிருந்த தூய ஒழுக்க முறைகள் தமிழ் மாணவர்கட்கு ஒரு தனி விருந்தாம். வைதாரையும் வாழ்விக்கும் திறனும், பகைவர், நண்பர், நொதுமலாளர் ஆய முத்திறத்தவரிடத்தும் பழகும் பண்பும், தமிழன் உற்ற இடர்களைக் களையும் அருட் கடலும், ஆவர் அடிகள். உரை நடை என்ன, விரிவுரை என்ன, ஒளிவிளங்கும் செய்தித் தாள்களிலுள்ள பொருள் நுட்பங்களென்ன, கலை நுட்பங்கள் என்ன, எந்நாட்டவரும் ஏற்றுக்கொள்ளும் பொது நோக்கு அமைந்த புதுக் கருத்துக்களென்ன, இவை போன்ற பிறவெல்லாம் அடிகளாரைத் தாமே தேடி வந்தடையும்.

ஆராய்ச்சி நூற்களின் அழகும், நேர்மையும், அமைவும், நுணுக்கமும் அடிகளாரின் நூலாராய்ச்சித் திறனை நுணுக்கமாகக் காட்டும் அடிகள் ஒரு கலைக் களஞ்சியம்! ஒரு கலங்கரை விளக்கம்! ஒரு திருநெறி மாமலை! தாமே தோன்றிய ஒரு தனி இளஞாயிறு!

அடிகளாருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்பவர் உறவினர் மட்டுமல்லர், புறவினத்தாரும்! புலவர் மட்டுமல்லர், புரவலரும்! இங்ஙனம் எல்லோர்க்கும் நல்லராய், மாமுது குரவராய், தமிழ் மொழியின் மாண்பு மறைய இருந்த நேரத்தில் தமது உடல்,பொருள், ஆவிகளைப் பொருட்படுத்தாமல் அதனை உயர்நினக்கு ஊக்கித் தாழாது ஒளிரும் நந்தா விளக்கெனத் தமிழகத்தில் சீர்மை செய்தவர் நம் அடிகளே ஆவர்.

திருநெறித் தமிழ் ஓதுவதையே தமக்குப் பொழுது போக்காகக் கொண்டு வாழ்க்கைத் தரத்தை வளமுடன் உயர்த்திக் கொண்டவர் அடிகளேயாவர். தம் மக்களுக்கும் மற்றுமுள்ள அன்பர்கட்கும் நற்றமிழ் மொழியையே வழக்கத்திலும் வழங்கவேண்டுமென்று வற்புறுத்தியவர். வகுப்பு வேற்றுமை, மதப்பூசல், சமயக் காழ்ப்பு முதலியவைகளை அறவே வெறுப்பவர். கண்டென இனிக்கும் கனிந்த குரலினராய், நல்லறிஞர் குழுமியுள்ள நல்லதொரு அவை வரவேற்கும் ஞாயிறாய், பசுமை படர்ந்த செம்மேனியராய், தமிழ் மணங்கமழும் பேச்சாளராய், கண்டோர் பிணிக்கும் கவின் ஒழுகும் திருமுகத்தினராய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/275&oldid=1580233" இலிருந்து மீள்விக்கப்பட்டது