உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

243

உலகளந்த பெருமானைப் போல் உயர்ந்த தமிழ்த் தோன்றலாய், நிலவியவர் நம் அடிகள்.

அடிகளாரின் மாசற்ற தொண்டு இன்றும் ஒரு மலையாகப் பொலிகின்றது. புதுமைத் தமிழ் உலகிற்குப் புத்துயிர் அளித்தவர். நமது மறைமலை அடிகளாவர். கடிதங்கள் தீட்டி, அவற்றின் வாயிலாகக் கன்னித் தமிழ்ச் சுவை உண்பிப்பவர் அடிகளாவர். செய்தித் தாள்களின் வாயிலாகச் செந்தமிழ்ச் சிறப்பை ஓதுவார் நம் அடிகள். பொருள் பொதிந்த அகல உரைகளின் வாயிலாகத் தமிழ் அழகைக்காட்டுவார் அடிகளார். புதுப்புது ஆராய்ச்சி களினால் பழந்தமிழர் வாழ்ககையை நிலைநிறுத்தியவர் அடிகள். அடிகள் உண்பதும் தமிழ் உணவே! புலால் என்னும் சொல்லைக் கேட்ட அளவிலே நெஞ்சு புழுங்குபவர். கொலை நோக்கமாகிய புலை நோக்கைக் கனவிலுங் கருதாதவர். தன்மானம் என்னும் போர்வையால் தம்மை மூடிக் காத்துக்கொண்டிருப்பவர் அடிகள். அடிகள் எழுத்தில் உயிர் நெளியும்; அழகு பழகும்; அன்பு தவழும்; அருள்நெறி குலவும்; பொருள்நலம் காணும்; வாய்மை விளங்கும்; தூய்மை ஒளிரும்.

முற்றுந் துறந்த முனிவர்கள் கையாண்ட ஒழுக்க முறைகளால் நூறு ஆண்டு எப்பொழுதும் இளமையோடு உலகில் உலாவலாம் என்பதையும் இவர் இயற்றியுள்ள “மக்கள் நூறாண்டு உயிர் வாழ்வது எப்படி?” என்னும் நூலிலிருந்து அறிந்துகொள்ளலாம். அன்றியும் உணவு அளவு, அது உண்ணும் நேரம், உணவின் கொழுமை, உழைப்பு இவற்றின் இயல்புகளும் தெள்ளிதின் இந்நூலகத்தே விளக்கப்பட்டுள்ளன. உழுவார்க்கு வேண்டும் கருவிப் பொருள்களும், உடல் உரமும், உயர் நலமும், இன்ப வாழ்வும், பிறவும் இதில் அங்கைக் கனியெனக் காணப்படுகின்றன.

உயிர் நூல், உடல் நூல், உள நூல், தரை நூல் முதலிய பலவகை நூல்களையும் அடிகள் நுணுகி ஆராய்ந்துள்ளனர். உழைத்த உடம்பிற்கு உறக்கம் ஓர் இயற்கை மருந்து என்றும் கூறுகிறார்.பச்சிலை மருந்து முதலியவற்றால் உடல்நலம் பெறாத உடம்பு தூய உணவாலும், உறக்கத்தாலும், நல்ல பழக்க வழக்கங்களினாலும் மேன்மையுறுமென்று கூறுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/276&oldid=1580235" இலிருந்து மீள்விக்கப்பட்டது