உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் 12

செய்யவேண்டிய அரசியற் கடமையை நினைந்து தடைப்பட்டேன். விருந்தில் உணவு கொண்டு சென்ற அப்பயல் அமராவதியின் வேனில் மண்டபத் திற்குப் போனதைச் சிலகுறிப்புகளால் அறிந்தேன். உடனே ஏவலரை அம்மண்டபத்திற்கு விடுத்து வருவித்துக் கேட்க, அவர் அம்பிகாபதியின் தங்கை காவேரியுடன் அமராவதி பேசிக் கொண்டிருப்பதாகப் பகர்ந்தனர். இதில் எனக்கொன்றும் புலனாகவில்லை. தாங்கள் தங்கள் நுண்ணறிவால் ஆராய்ந்து உண்மையைக் காண வல்லீர்களென்று தங்களை மீண்டும் இங்கு வருவித்தேன்.

கூத்தர் : அது நன்றுதான், அம்பிகாபதியும் அவன் தங்கை காவேரியும் உருவ அமைப்பில் ஒருவராயிருத்தலை நீ அறிவாயா?

அரசன் : யான் அறியேன்; அவன் தங்கையை யான் பார்த்ததேயில்லை?

கூத்தர் : அவ்விருவர்க்கும் ஆண் உடையோ பெண் உடை யோ இரண்டிலொன்றை அணிவித்துப் பார்த்தால், அவ்விருவரில் யார் அம்பிகாபதி, யார் அவன்றங்கை காவேரியென்று தெரிந்துரைத்தல் எத்துணைக் கூர்த்த அறிவினார்க்கும் எட்டுணையும் இயலாது; பெண்ணுடையிற் காவேரியும் ஆணுடையில் அம்பிகாபதியும் இருந்தால் மட்டுமே இருவரையும் வேறு வேறென்று அறிதல் கூடும்.

அரசன் : ஆ! அங்ஙனமாயின் தன் தங்கையின் உடையிற் கரந்து வருபவன் அம்பிகாபதியென்றே கருதுகின்றீர்களோ? கூத்தர் : ஒருகால் அங்ஙனம் இருக்கலாமென்று எண்ணு கின்றேனேயொழிய உறுதியாக யான் அதனைக் கூறவில்லை. அதனை உறுதிப்படுத்திக் காண்பது நினது முயற்சியின்பாலது.

அரசன் : நல்லது பெருமானே, கள்வனைப் பிடிக்க இப்போது வழி கண்டேன்! இனித் தாங்கள் போய் வரலாம் (என்று வணங்க அவர் போய்விடுகின்றார்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/223&oldid=1581087" இலிருந்து மீள்விக்கப்பட்டது