உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் 12

யான் இப்போது தங்களைக் கதுமெனக் காணும் பேறு பெற்றேன். யான் தங்கட்குக் குற்றேவல் புரியத் தாங்கள் என் சிறு குடிலிலேயே தங்கியிருக்கத் திருவுளம் பற்றல் வேண்டும்.

66

கம்பர் : (அது கேட்டுளங்களித்து)

“அவனி முழுதுண்டும் அயிரா வதத்துன் பவனி தொழுவார் படுத்தும் - புவனி யுருத்திரா வுன்னுடைய ஓரங்கல் நாட்டிற் குருத்திரா வாழைக் குழாம்”

பிரதாபருத்ரன் : (அவரை வணங்கி) பெருமானே! தங்கள் திருவாயால் இவ்வளவு யான் உயர்த்துப் பாடப் பெறுதற்கு என்ன தவஞ்செய்தேன்! பல நாட்களாக நெடுவழி வந்தமையால் தாங்களும் உடன்வந்தவர்களும் மிகக் களைத்துப் போயிருக்கிறீர்கள். (காவலாளியைப் பார்த்து) அடே மாதவா, நமது வேனில் மண்டபத்தருகிலுள்ள மாளிகையில் இவர்கட்கு இருக்கை அமைத்து, அங்குள்ள ஏவலர்கள் இவர்கட்கு வேண்டும் எல்லா வசதிகளுஞ் செய்யும்படி கற்பித்துச் சுருக்கென வா! (அவன் வணங்கிப் போகக் கம்பரை நோக்கி) தங்கள் பின்னே ஒடுங்கி நிற்கும் இவர் தங்கள் புதல்வரென்று கருதுகின்றேன்.

கம்பர் : வேந்தே, நீ வாழ்க! இவன் என் மகன் அம்பிகாபதி; அதோ அங்கே ஒதுங்கி நிற்கும் மங்கை என் மகள் காவேரி; அவளுக்குப் பின்னே சிறிது மறைந்து நிற்கும் நங்கை என் மருமகள், அம்பிகாபதியின் மனைவி, சோழ மன்னனன்றன் அருமைப்புதல்வியார்; இவரைப் பாதுகாத்தற் பொருட்டே சோழமன்னன் சீற்றத்திற் கஞ்சி நும்மைப் புகலிடமாய் அடைந்தோம்.

பிரதாபருத்ரன்

புலவர் பெருமானே, இப்போ தெல்லாம் விளங்க அறிந்தேன். இன்னும் இதன் வரலாறு களை யெல்லாம் பின்னர்க் கேட்டறிவேன். தாங்கள் சிறிதும் அஞ்சல் வேண்டாம். தங்களில் எவர்க்கும் எவரும் எத்தகைய தீங்கும் இழைக்க யான் அதனை உயிருடனிருந்து காணேன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/259&oldid=1581192" இலிருந்து மீள்விக்கப்பட்டது