உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

83

சம்பந்தப்பட்டமட்டில்,நடப்பவை நடக்கட்டுமென்று விட்டிருப் பேனாக.” என்று சொல்லிக் கொண்டான்.

ஏதோ ஒரு முக்கியமான உபாயத்தைக் கருதி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டவனாய், நல்லான் திடீரென மாதவன் பக்கமாய்த் திரும்பி “எனக்கு உன் உடையைத் தந்து என்னதை நீ மாற்றி எடுத்துக் கொள்.” என்றான்.

மாதவன் கள்வன் அல்லன்; அப்பக்கங்களிற் பலவிடத்தில் நல்லானால் ஏற்படுத்தப்படும் தீவிர காரியநிருவாகருள் ஒருவனாவன். தன் தலைவன் சொன்னதற்கு உடனே இணங்கி அவன் இவனோடு தன்னுடையை மாற்றிக் கொண்டான்.நல்லான் மலையநாட்டில் நடுத்தர வாழ்க்கையிலுள்ளாரின் உடையில் விரைந்து தோன்றினான்; இவன் தன்னிடத்தில் படைக்கலன்கள் வைத்திருப்பதாக வெளிக்குக் காணப்படா விட்டாலும், தான் புதிதாக அணிந்து கொண்ட உள் அரைச் சட்டையின் கீழே கைத் துப்பாக்கியனையும் குத்துவாளினையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். தென்புறமாய்ப் பலநாழிகை தூரத்திலுள்ள கோபுரத்திற்கு அனுப்பப்பட்ட தன் ஆட்கள் விரைவில் மீளுவர் என்று எண்ணி இருளனிடத்திற் சில ஏற்பாடுகளைச் சொல்லி விட்டுத் தனது புரவியிலும் தாழ்ந்ததாயிருந்தமையால் தான் இப்போது கொண்ட தாழ்ந்த கோலத்திற்கு இசைவாயிருக்கு மென்று மாதவன் குதிரைமேல் ஏறிப் புறப்பட்டான்.

மாலைக்காலத்து மங்கற்பொழுது வரவர மிகுந்து வரலாயிற்று; அப்போது நல்லான் முன் சொன்ன வகையாய் மாறு கோலம் பூண்டு, மாதவனால் முன்னமே அறிவிக்கப்பட்ட படி நாகநாட்டரசியும் அவள் பாங்கிமார் இருவரும் சென்ற பட்டினத்தே வந்து சேர்ந்தான். தன்னை யாருந் தெரிந்து கொள்ள மாட்டார்களென்று தான் திண்ணமாய் உணர்ந்த மையால் நல்லான் முதன்மையான சத்திரத்திற்கு நேரே சென்று, தனக்குந் தன் குதிரைக்கும் விடுதி சித்தம் பண்ணும்படி கேட்டான்; தனது குதிரைக்குச் செவ்வையாகத் தீனி முதலியன வைக்கப்பட்டனவா என்று பார்க்கச் செல்வான் போல, இவன் குதிரைலாயத்திற்குட் சென்றான்; நாகநாட்டரசி குமுதவல்லியும் அவள் பாங்கிமார் இருவரும் ஊர்ந்து வந்த குதிரைகளின் அங்க அடையாளத்தை மாதவன் தனக்கு அறிவித்தபடியே, அங்கே கட்டப்பட்ட மூன்று அழகிய குதிரைகளும் உடையனவாய் இருக்கக்கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/112&oldid=1581367" இலிருந்து மீள்விக்கப்பட்டது