உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

113

திகிலைத்தரும் அச்சண்டையின் முடிவு குமுதவல்லி யினாலும் அவள் பாங்கிமாராலும் காணப்படாவிடினும், அது முடிந்து போயிற்றென்பதை அவர்கள் ஏற்கனவே தெரிந்து கொண்டார்கள். இப்போது அவர்கள் இப்பௌத்த இளைஞன் சொல்லிய சொற்களிலிருந்து கடைசியாக இவன் கையினாலே தான் அப்புலி இறந்துபட்டதென்று தெரிந்தார்கள். குமுதவல்லி அவனுக்குத் தன் நன்றி மொழிகளை பொழிந்தாள்; கலக்கமும் ஐயமுங் கலந்த நோக்கத்தோடும் சொல்லசைவோடும் அவள் தன்பின் வழித்துணையாய் வந்த நீலகிரி நாட்டார் இருவர் விதிப்பயனையும் பற்றி உசாவினாள்.

அதற்கு நீலலோசனன், “அத்துர்ப்பாக்கிய மனிதர்மேல் பரபரப்பாக என் பார்வையைச் செலுத்திப் பார்த்தவரையில், நங்கைமீர், அவ்விருவரும் பிழைத்திருக்கின்றார்கள் என்று உங்கட்கு உறுதியுரை சொல்லக்கூடியவனாவேன்; ஆனால் அவர்கள் அபாயமான வகையில் சின்னபின்னப் படுத்தப் பட்டிருக்கின்றார்களென அஞ்சுகின்றேன். என்கூட வந்தவர்கள் ருவரும் அவர்களுக்குத் தம்மாற் கூடியமட்டும் உதவி செய்து கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் காயங்களினின்று இரத்தம் ஒழுகுவதை நீங்கள் பாராதிருக்கும்பொருட்டும், திகிலான இந்நிகழ்ச்சியின் முடிவைத் தெரிவிக்கும் பொருட்டும் யான் இங்ஙனம் முன்னே விரைந்து வந்தேன்." என்று மறுமொழி புகன்றான்.

L

உடனே குமுதவல்லி காயப்பட்ட அம்மனிதரிடத்து இரக்கமுங் கவலையும் மிக உடையவளாய், "ஐயன்மீர், யானும் என் தோழிமாரும் ஏதேனும் உதவி செய்யக்கூடுமா? என்பதைச் சொல்லுங்கள். ஒருகால், உங்கள் மனிதரைவிட யாங்கள் அக்காயங்களைத் திறம்படக் கட்டக்கூடுமே; ஏனென்றால் எங்கள் பெண்பாலர்க்கு அஃது உரிய தொழிலன்றோ?" என்று கூறினாள்.

"நங்கைமீர், என்னுடன் வந்தவர்கள் போர்நிகழ்ந்த இடங்களில் இருந்து அனுபவம் ஏறினவர்கள்; காயங்களைக் கட்டுவது அவர்களுக்குப்புதிய தொழில் அன்று. நான் திரும்பி வரும் வரையில் இங்கே தானே தங்கியிருக்க அன்பு கூருங்கள், கெடுதி சேர்ந்த இடத்திற்கு யான் கடுகத் திரும்பிப் போகின் றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/142&oldid=1581399" இலிருந்து மீள்விக்கப்பட்டது