உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் -13

இவ்வாறு ஐந்து நாழிகை வரையில் மீனாம்பாள் அந்தத்தெளி நீரோடையின் பக்கத்தே இளைப்பாறிக்கிடந்தாள்; இனித் திரும்பப் பயணந் தொடங்குதல் தக்கதென்று அவள் எண்ணிய அச்சமயத்தில் குதிரைக் குளம்படிகளின் ஓசை அவள் செவியில் வந்து பட்டது. உடனே அவள் திடுக்கிட்டு எழுந்து தன்னை அம்மரச்செறிவின் இடையே மறைத்துக்கொண்டாள். கூடாரமும் அவன் பணிப்பெண்களும் கண்ணுக்கு தென்படாமல் பசிய மரப்பந்தர் நடுவே யிருந்தார்கள். மீனாம்பாள் யார் வருகிறார்கள் என்று தெரிய நோக்கினாள். அந்தப் பௌத்தர் மூவரையும் எதிர்ப்படுவதில் அவள் சிறிதும் பிரியமில்லா திருத்தலால் அவள் தன்னை இங்ஙனம் எச்சரித்துக் கொண்டது பற்றி யாரும் வியப்படைதல் வேண்டாம்.

மூன்று

ஆனால், குதிரைமேல் அணுகவந்தவர்கள் மாதர்கள். ஆகவே, மீனாம்பாள் தான் ஒளிந்திருந்த இடத்தை விட்டு வெளியேவந்தாள். அவள் அவர்கள் முகத்தைப் பார்க்கக் கூடவில்லை-வெயில் வெப்பத்தால் அவர்கள் முக்காட்டை முகத்தின்மேல் இழுத்திருந்தார்கள். என்றாலும், தன்பாங்கிமார் பின்னேவர முன்னேறிவந்த அந்நங்கையின் அழகிய வடிவு அவள் உள்ளத்திற்சென்று பதிந்தது. உடனே மீனாம்பாள் உள்ளத்தில் ஒருசமுசயம் சடுதி யிற்றோன்றியது. இவள் நாகநாட்டரசியாய் இருக்கக்கூடுமோ? இவள் என் கணவன் பார்வைக்குத்தப்பி வந்தவளோ? தற்செயலாக இவள் என் வழியில் வந்து அகப்பட்டுக் கொண்டனளோ? ஆம் தன்றோழி மாரோடு வந்த அவள் குமுதவல்லியேதான். மீனாம்பாள் வேண்டுமென்றே வந்த சுற்றுவழியும், முன்நாள் மாலைக் காலத்தில் பஞ்சாலைத் தலைவன் வீட்டின் அருகேயிருந்து குமுதவல்லி பறந்து விரைந்து வந்த அவ்வழியும் அவர்களை அவ்வாறு ஒரே இடத்திற் கொண்டுவந்து விட்டன. நாகரீகமான உடை அணிந்த அழகிய மாது ஒருத்தி அவ்வோடையின் பசியகரை மேல் நிற்றலை நாகநாட்டரசி பார்த்தவுடனே நட்பின் உபசார அடையாள மாகத் தன் முக்காட்டை அப்புறம் வாங்கினாள். மீனாம்பாள், தன் கணவனால் விரித்துரைக் கப்பட்ட வருணனையோடு தனக்கு எதிரிலுந் தோன்றிய அற்புதமான அவள் அழகினையுங் கண்டு, இப்போது தான் கண்ட அந்நங்கை நாகநாட்டரசியே என்பதில் எள்ளளவும் ஐயமுறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/185&oldid=1581458" இலிருந்து மீள்விக்கப்பட்டது