உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் – 13

இளைஞனான நீலலோசனன் இங்ஙனம் பேரழகு டையனாய்த் திகழ்ந்தனன். அவன் உடுத்திருந்த உடைகளை நோக்குமிடத்து அக்காலத்து அரசர் வழக்கப்படியே அணிந் திருந்தனன் என்பது தோன்றிற்று. இருண்ட பச்சை நிறமுடைய சட்டையின் ஓரங்களினும், மார்புப்புறத்தினும் பூத்தொழில் செய்யப்பட்ட பொற்சரிகை பின்னப்பட்டு மினுமினுவென்று மிளிர்ந்தன. இவன் அரையின் கீழ்த் தரித்திருந்த காற்சட்டையில் நீளத் தைத்திருந்த பொற்பட்டையினால் அரைக்கீழுள்ள உறுப்பு கள் குதிரையை நடாத்தும் போது மிகவுந்திருந்திய இலக்கணம் வாய்ந்து தோன்றின. இவ்வாறு இவன் அணிந்திருந்த உடை இவன் அங்கங்களில் இறுகப்பொருந்தி இவன் உருவவழகினை நிரம்பவுஞ் சிறப் பித்துக் காட்டிற்று. இவன் தொங்கவிட்டிருந்த கொடுவாளுறை நாம் முன்மொழிந்தபடியே பொன் மினுக்குப் பூசப்பட்டிருந்தது. அதன் பிடியில் உயர்ந்த முழு மணிகள் அழுத்தப்பட்டிருந்தன. குதிரை மேற்போர்வையில் பொற்சரிகை யினால் அழகிய உருக்கள் பின்னப்பட்டு விளங்கின. எல்லா வற்றானும் ஆண்டன்மை இனிதுதோன்றக் குதிரைமேல் வரும் நீலலோசனன் அழகிய உருவமானது அம்மலைநாட்டு மகளிர் அவன் செல்வதைப் பார்க்கும்பொருட்டுத் தங்குடிசைகளி னின்றும் புறம்வந்து நோக்குகையில் அவர்க்கு அவன்மாட்டு மிகுந்த விருப்பத்தையும் பெருங்காதலினையும் விளைவித்தது; இவனைப்பார்த்த அம்மலைநாட்டு ஆடவரோ இவ்விளைஞன் குதிரைமேல் அமர்ந்துவரும் இலேசான நிலையினையும் ஆண் கைமையினையும் வியந்து நோக்கி அவனைத்தாங்கிய குதிரை யின் அங்க அமைப்பையும் உற்றுப்பார்த்து மகிழ்ந்தனர். இங்ஙனம், இவன் வருகையில் இவனுடன் பின்வருவோர் இருவரேயாயினும், இவன் உருவத்தோற்றமானது அங்குள்ளார் கருத்தையெல்லாம் இவன் வயப்படுத்து இழுத்தது.

அவனும் வழிதொடர்ந்துபோன வண்ணமாய் இருந்தனன்; வ்வாறு பலநாழிகை கடந்தன; தானுந் தன்காவலரும் இடையிடையே தங்கி இளைப்பாறிக் குதிரைக்குந் தீனி கொடுத்துக்கொண்டு கடைசியாக மூன்றுவழிகள் பிரியும் ஓரிடத்தில்வந்து சேர்ந்தனன். இப்போது அவர்கள் எந்தவழியிற் செல்வதென்று தெரியாமல் திகைத்தனர்; இம்மூன்றில் எது நேராக நீலகிரி நகரத்திற்குச் செல்லுகின்ற தென்பதைக் கேட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/63&oldid=1581318" இலிருந்து மீள்விக்கப்பட்டது