உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

41

தோன்றும் மரங்களும், பலவேறு வகைப் பட்ட அழகும் நிறனும் வகைப்பட்ட உடையவாய்; பசும்புற்கற்றை மேல் இறைந்து கிடக்கும் பல்லாயிரம் பூக்களும், அவை முகை விரித்தலாற் காற்றிற் பரந்து உலவுங் குளிர்ந்த நறுமணமும், மேலே கவிந்து திகழும் நீலவானும் என்ற இவையெல்லாம் இவ்விடம் அரம்பைமாது போல்வாளான இப்பெண்மணி தனியளாய் இருத்தற்குப் பெரிதுந் தகுதியுடைய கற்பக இளங்காவேயென விளங்கச்செய்தன. மேலும், இங்ஙனம் வழி நடந்துவரும் இம்மலைநாடுளைப்பற்றித் தான்கற்ற கட்டுக்கதை களானும் அற்புத வரலாறுகளானும் உணர்ந்த படி யே நற்குண முடையளான ஓர் சூர்மகள் வசிக்கும் மாயா நிலத்திற்றான் வந்து சேர்ந்தனமோ என்று நீலலோசனன் தன் இளம்பருவத் தியற்கையாற் பலவாறு சிந்திப்பானாயினான்.

இம்மாது, அவ்விளைஞன் வருதலை முன்னுணர்ந்து குதிரையடி யோசையையும் அறியாமல் அவ்வளவு ஆழ்ந்ததோர் சிந்தனையில் தன் அறிவை ஒருங்கச்செய்து அவனைப்பாராது உண்மையாகவே இருந்தனளோ? அல்லது, தான் அவனைப் பார்க்குமுன்னே அவன் பேரழகாற் சிறந்த தனது உருவத்தைக் கண்டு கண்களுக்கு விருந்து செய்கவென்று எண்ணி அறியா தாள்போன்று வாளாது இருந்தனளோ? நாம் அறியோம். ஆயினும், இங்ஙனம் ஆழ்ந்ததோர் சிந்தனையிற் றன்னை யிருத்திப் பல நிமிஷங்கள்மாத்திரம் கழிந்தனவென்பது நிச்சயம். கழிய, உடனே தம் கண்களை ஏறிட்டு அவனை நோக்குதலும், அவள் மாட்டு ஒரு தடுமாற்றமும் வியப்புங் குறிப்பாய்த் தோன்றி மறுகணத்தே மறைந்தன. திரும்பவும் அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தனள். உடனே தான் அச்சமயத் திற் செய்தற்குரிய ஒரு விதியினை மறந்துவிட்டாற் போலத் திடுக்கிட்டுத் தன் முதுகின் புறத்தே குவிந்து கிடந்த சல்லாவினை யிழுத்து முகத்தை மூடிக்கொண்டனள். அவ்வாறு மூடிக் கொள்ளுகையில் தன் கண்ணுறை மணியினுள்ளே சென்றடங்கு வதான ஒருவகைக் குளிர்ந்த ஒளிநோக்கத்தோடும் நீலலோசனன் மேற் றன் பார்வையை ஊன்றினாள்.

நீலலோசனன் அப்பெண்மணியைப்பார்த்துப் பணிவாய் வணங்கி வாழ்த்தும்போது, பின்றாங்கிவந்த இவன் காவலாளர் இருவரும் இவனுக்குப்பின்னேவந்து சேர்ந்து மரியாதையின் பொருட்டுச் சிறிது அகன்று குதிரையை நிறுத்திக்கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/70&oldid=1581325" இலிருந்து மீள்விக்கப்பட்டது