உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

85

போனான். இதற்கு மணி பன்னிரண்டானதால் அம்மாவும் நானும் நன்றாய்த் துங்கிவிட்டோம். பின் மூன்று நாளைக்குப் பிறகு அப்பா அம்மாவிடம் வந்து ‘அந்த முதலிப் பயலை ஊரைவிட்டுத் துரத்திவிட்டேன்' என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் உன்னை நினைத்து நான் ரொம்பவும் வருத்தப் பட்டேன். அக்கா, தெய்வநாயகத்திற்கு நீ காகிதம் எழுதுகிற நீ செய்தி எனக்குச் சொல்லியிருந்தால் நான் ஜாக்கிரதையாய் இருந்திருப்பேன்” என்று எல்லாம் விடாமல் என் தங்கை மிகுந்த நினைப்போடு சொன்னான். நடந்த இவ்வளவு விஷயங்களையும் சிறிதும் மறவாமல் நினைப்பில் வைத்திருந்து சொன்ன என் தங்கையின் ஞாபகசக்தியையும் புத்தி சாதுரியத்தையும் கண்டு மகிழ்ந்து அவளை முத்தம் வைத்தேன். அவள் சொல்லிய செய்திகளால் அச்சமும் திகிலும் களிப்பும் துயரமும் என்னிற் கலந்து தோன்றின. இனி அருமையிற் சிறந்த என் தங்கையை அடிக்கடி காணவும் அவளோடு பேசவும் இடம் நேராதென்பதைக் கண்டு கொண்டேன். அதனாற் கன்றைப்பிரிந்த ஆபோற் கலக்கமுற்று ஆற்றாமை மிக அவளைப் பலகால் அணைத்து முத்தம் வைத்தேன். அச்சமயத்தில் அவளும், “அக்கா, அம்மாவும் அப்பாவும் இனிமேல் என்னை உன்னிடம் அனுப்பக் கூடாதென்று, பேசிக் கொண்டார்கள். உன்னை நம்ம வீட்டுக்கு அழைக்கக் கூடாதென்றும் இங்கே மாமியும் நாத்தனாருந்தாம் உன்னை அடக்கத்தக்கவர்களென்றும் சொன்னார்கள்” என்று வருத்தத்தோடு கூறினாள். "குழந்தாய், நம் அண்ணாவும் நானும் உயிரோடிருக்கும் மட்டும் நான் உன்னைக் காணாமல் இரேன். அதோ அம்மா கூப்பிடுகிறாள், கீழே போவோம் வா” என்று அவளோடு கூடக் கீழே வந்துவிட்டேன்.

என் பெற்றோரும் தமயனும் மாமியும் நாத்துணாரும் மைத்துனனும் எல்லாம் என் மாமனாரைச் சூழ இருந்துகொண்டு பற் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.என் தமயன் மட்டும் அடிக்கடி மாமனாரைக் கவனித்து வந்தான். மாமனாரும் மிகுதியாய் என் தமயனோடுதான் பேசினார். ஏழு மணி அடித்தது. உடனே தலைவாயிலண்டை ஒருவண்டி வந்து நின்றது. இரண்டொரு நிமிஷத்திற்கெல்லாம் அப்பாரசிகப் பெருமானும் பெருமாட்டியும் உள்ளே வந்தனர். அவர்கள் வரவினைக் கண்டவுடன் மழைமுகங்கண்ட பயிர்முகம் போல மகிழ்ந்து விரைந்து சென்று அவர்களை எதிர்கொண்டேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/114&oldid=1582072" இலிருந்து மீள்விக்கப்பட்டது