உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

101

புன்முறுவல் செய்தது. ஆனால், ஏதும் வாய்த்திறந்து பேசிற்றிலது. பின்னர் சிறிது நேரங்கழியவே, அத்திருவுருவமும் அங்கே கமழ்ந்த மணமும் அப்பேரொளி வட்டமும் மெல்ல மெல்ல மறையத் துவங்கின. அச்சமயத்தில் என்னையறியாத ஓர் அயர்ச்சி வந்து சூழ்ந்தது. அப்புறம் இன்னது நடந்ததென்று எனக்கொன்றுந் தெரியாது. மறுபடியும் யான் கண்ணைத் திறக்கையில் கோழி கூவியது. கிழக்கெல்லாம் பொன் நிறமாய் வயங்கிற்று. கதிரவன் செம்பொற் குடம்போலக் காணப் பட்டான். நான் மெல்ல எழுந்து பார்க்கையில் யான் என் படுக்கையில் நன்றாக அயர்ந்து உறங்கினதாகவே கண்டேன். என் மாமனாருக்கு இன்னும் உறக்கம் நீங்கவில்லை. மகிழ்ச்சிததும்பும் முகத்தோடு அவர் நன்றாய்த் தூங்கவே, அவ்வறையைவிட்டு அப்பாற்போய் என் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, இக் கடிதத்தை உடனே உங்கட்கு எழுதினேன். இன்று நடப்பன வெல்லாம் நாளைக் கடிதத்தில் எழுதி அனுப்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/130&oldid=1582088" இலிருந்து மீள்விக்கப்பட்டது