உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

கடிதம் - 9

என் ஆருயிர்க்குயிரான காதலரே,

நேற்று நான் எழுதிய கடிதத்தைப் பார்த்திருப்பீர்களென்று நம்புகின்றேன். இன்று பிற்பகல் ஏறக்குறைய மூன்று மணி யிருக்கும். ஒரு மணிக்கு வாற்கோதுமைக்கஞ்சி குடித்தபின் அயர்ந்துறங்கின என் மாமனார் அப்போதுதான் கண் விழித்தார். விழித்ததும் ‘மணி எவ்வளவு?' என்று கேட்டார். மூன்று மணியென்று யான் தெரிவிக்கவே, அவர் “குழந்தாய், இப்போது உன் தமையனும், அந்தப் பாரசிககனவானும் அவர்தம் மனைவியாரும் வேறிரு கனவான்களும் வருவார்கள். நாற்காலி களைச் செவ்வையாக என் பக்கங்களில் இடு. பின் கட்டிலுள்ள நம்முடைய பேய்கள் நன்றாய்த் துங்குகின்றனவா வென்று பார்த்து, அந்தக் கதவையிழுத்து இந்தப் பக்கந் தாழ்ப்பாள் இ டுவா” என்று மெல்லெனக் கூறினார். என் மாமியும், நாத்துணாரும் ஒவ்வொருநாளும் பிற்பகலில் இரண்டு மணி முதல் ஐந்தரை அல்லது ஆறுமணி வரையில் நன்றாய்த் தூங்கும் வழக்கத்தை என் மாமனார் செவ்வையாகத் தெரிந்திருந்துங், கதவைத் தாழ்இட்டுக் கொள்ளும்படி கற்பித்ததைப் பார்த்தால் ஏதோ என்னைப்பற்றி முக்கியமானது பேசப் போகின்றார் களென்று எண்ணி, அங்ஙனமே அதனை இழுத்து அரவமின்றித் தாழிட்டுத் திரும்பினேன். தலைவாயிலண்டை வண்டிகள் வந்து நின்றன. இரண்டு நிமிஷத்திலெல்லாம் என் தமையன் முன்னே வழிகாட்டிவர, அவன் பின்னே எங்கள் குலத்தவரான கனவான்கள் இருவரும், அவர்கட்குப் பின்னே என் தந்தையே யனைய அந்தப் பாரசிக கனவானும் என் அன்னையே யனைய அவர்தம் மனைவியாரும் வந்தனர். கனவான்கள் மூவரையும் மாமனார் படுத்திருக்கும் அறையுள் என் தமையன் அழைத்துச் சென்றான். வேறிருகனவான்கள் கூட வந்திருத்தலையறிந்து அப்பாரசிகப் பெருமாட்டியார் அவ்வறைக்குள்ளே செல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/131&oldid=1582089" இலிருந்து மீள்விக்கப்பட்டது