உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் -14

இல்லாமற் போகின்றன. இவையிரண்டும் இல்லாதவர் தாம் செய்யும் ஏற்பாடுகள் எல்லாவற்றிலும் வழுவிப் பிழைபடுதலின் யானை மண்ணைவாரித் தன்றலையில் இட்டுக்கொள்வது போல, அவர்கள் தாமாகவே தமக்குப் பேரிடரை வருவித்துக் காள்கின்றனர். மற்றக் குடிமக்களெல்லாம் நல்வழியில் நடக்கும் பொருட்டுத் தானே முன்நடந்து காட்ட வேண்டியவர்களான எங்கள் பார்ப்பன குலத்தவர்கள் செய்து வைத்திருக்குங் கட்டுப்பாடுகளைப் பாருங்கள்!

பெண்பிள்ளைகள் மங்கைப்பருவம் அடைதற்கு முன்னமே அவர்களை மணஞ்செய்து கொடுக்கவேண்டுமென்றும் அப்படிச் செய்யாதவர்களைத் தஞ்சாதிக்குப் புறம்பாக்கவேண்டுமன்றும் ஒரு கட்டுப்பாடு செய்துகொண்டார்கள். இந்தப் பொருந்தாக் கட்டுப்பாட்டைமுற்பிறவியிற் செய்த பழவினையா உண்டாக்கிற்று? இல்லையே,பெண்மக்களிடத்தில் தாம்வைத்த நம்பிக்கைக் குறைச்சலினாலன்றோ இவர்கள் தாமாகவே இந்தக் கட்டுப் பாட்டை ஏற்படுத்தினர்? தாம் செய்த இப்புதுவினையால் ஐயோ! இவர்கள் எவ்வளவு துன்பத்தை உழக்கின்றார்கள்! தம்மை நம்பின பேதைப் பெண் மக்களையும் எவ்வளவு பெருந்துன்பத்திற்கு ஆளாக்கி வருகின்றார்கள்! உலக இயற்கையில் உள்ள எந்த உயிர்களிலாயினும் இத்தகைய கட்டுப்பாடு காணப்படுகின்றதா? ஆடு மாடு மான் மரை மயில் குயில் முதலான தாழ்ந்த உயிர்களுங்கூடத் தத்தம் பருவம் அடைந்த பின்னன்றோ தம்மிற் கூடிக் களிக்கின்றன? மாஞ் செடி கொடிகளும் இலைநிறையத் தழைத்துப் பூத்தபின்னல்லவா அழகிய வண்டினங்கள் இன்னிசை மிழற்றிக்கொண்டு அவற்றை அணுகு கின்றன? இன்னும் உலகின்கண் உள்ள மக்கட்பிறப்பினரில் ஒரு மிகச் சிறு பகுதியாய் உள்ள எம்பார்ப்பன இனத்தவரை ஒழித்து, வேறெந்த மக்கட் பகுப்பினரிலாயினும் இதனையொத்த பொல்லாத கட்டுப்பாடு காணப்படுகின்றதோ? இல்லையே. இவன் தனக்கு ஏற்றவன் இவன் தனக்கு ஏலாதவன் என்று சிறிதும் பகுத்தறியத் தெரியாத இனம் பெண்மகவை உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய அரும்பெருங் கடமைகளையும், அவற்றைத் தான் ஏற்று நடத்துங்கால் தனக்கு உற்றதுணையாவான் இவனேயென்ப தனையுந் தினைத்தனையும் அறிய மாட்டாத ஒரு பேதைப் பெண்மகவை, அதன்றாய் தந்தையாரும் சுற்றத்தவருந் தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/147&oldid=1582115" இலிருந்து மீள்விக்கப்பட்டது