உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மறைமலையம் -14

உன்னை எங்களோடு அனுப்புவதற்கு உன் பெற்றோரும் உன் மாமியார் நாத்துணாரும் சிறிதும் உடன்பட மாட்டார் களென்றும், உனக்கும் எங்களுக்கும் நேசம் உண்டானதிற் றினையளவும் உடம்பாடு இல்லாதவர்களாய் அந்நேசத்தை மாய்க்க ஏதேதோ ஏற்பாடு செய்கிறார்களென்றும், உன்னிடத்தும் உன் தமையனிடத்தும் உள்ள பொருள்களையெல்லாம் பறித்துக் கொள்வதற்கு எத்தனையோ வகையான சூழ்ச்சிகள் எல்லாம் செய்கிறார்களென்றும் உன் தங்கையின் வழியாக உன் தமையனார் தெரிந்து கொண்டிருக்கிறார். ஆகையால், உன்னை எங்களிடங் கொண்டு வந்து சேர்ப்பிக்கும் இன்னுஞ் சில நாட்கள் வரையில் இந்தப்பொல்லாத மனிதரிடையில் உன்னைவைத்து எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்று அவர் மிகவுந்தவிக்கிறார். இந்தச் செய்திகளைக் கேட்டது முதல் எங்கள் உள்ளம் ஒரு நிலைப்படாமல் சுழன்று கொண்டேயிருக்கின்றது. அவர்களில் எவருக்குந்தெரியாமல் உன்னை இப்போதே அழைத்துப் போகலாமா என்று பேசிப்பார்த்தோம். அதுவுங் கூடியதாயில்லை. ஒருகால் என் மைத்துனனார் பம்பாயில் காலமாய் விடுவரேல், சில நாட்கள் வரையில் அங்கே எல்லாம் பெருங் குழப்பமாய் இருக்கும். அப்போது இவர்கள் அங்கே உன்னைத் தேடிக் கொண்டுவந்து உன்னை மீண்டும் இந்த ஊருக்கு அழைத்துக் கொண்டுபோக வேண்டுமென்று வலுகட்டாயம் பண்ணுவார் களானால், அப்போது பலவகையான இடர்கள் உண்டாகும்; அந்த நேரத்தில் இவர்கள் செய்யும் வம்புக்கு ஈடு கொடுப்பது ஐயா அவர்களுக்கு முடியாமையாய் இருக்கும். ஆதலால் இப்போது எங்கட்கு நேர்ந்திருக்கும் இவ்வல்லல் களெல்லாம் ஒழிந்து எங்கள் அலுவல்கள் எல்லாம் ஓர் ஒழுங்குக்குவந்தபின் தான் உன்னை எங்களிடம் அழைத்துக் காள்வது நலம் என்று முடிவுகட்டினோம். சிறிதேறக்குறைய இன்னும் ஒரு மாதத்தில் எல்லாம் ஒருவழிப்படு மென்றும், அதன்பிறகு உன் தமையனார் உன்னை அழைத்துக் கொண்டு பம்பாய்க்கு வரும்படி திட்டஞ் செய்ய வேண்டுமென்று ஐயா அவர்கள் சொன்னார்கள். நாளை மாலை வண்டியில் நாங்கள் புறப்படுவதால், நாளைக்கு நம் அன்பர் தெய்வ நாயகத்திற்கு ஒரு தந்தி கொடுத்து அவர் மற்றைநாள் வாடிச் சந்திப்பில் வந்திருந்து வண்டியிலேயே எங்களைப் பார்க்கும்படி செய்யலாமா? ஐயா அவர்களும் யானும் அவரைப்பார்ப்பதற்கு மிக விரும்புகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/153&oldid=1582124" இலிருந்து மீள்விக்கப்பட்டது