உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

கடிதம் - 12

ன்னமுதத்தினும் இனிய குணம் வாய்ந்த என் காதற்

செல்வமே!

யான் முற்கடிதத்தில் எழுதிய படியே முந்தாநாள் மாலையில் வண்டியேறப் போம்போது, அன்பிற் சிறந்த அப்பாரசிக குடும்பத்தார் என்னிடம் வந்து சொல்லிக்கொண்டு போனார்கள். அவ்வம்மையார் என்னைப் பிரியமாட்டாமல் என்னைத் தமது மார்பிற் சார்த்திக்கொண்டு தேம்பித்தேம்பி அழுதார்.நாங்கள் இருவேமும் இங்ஙனங் கண்ணீர் உதிர்ப்பதைக் கண்டு அவர்களின் பெரியபெண் வருந்தியவருத்தமும் மற்றச் சிறு குழந்தைகள் பட்டபாடும் எத்தனை பிறப்பெடுத்தாலும் என் நெஞ்சை விட்டு அகலா. தந்தையினுங் கோடி மடங்கு சிறந்த அப்பாரசிகப் பெருமான் என் கைகளை எடுத்துத் தம் கண்களில் ஒற்றிக்கொண்டு கண்ணீர் ஆறாய்ப் பெருக்கினார். இங்ஙனம் நாங்கள் எல்லாரும் ஆற்றக்கூடாத துயரம் அடைவதைப் பார்த்து மனங்கலங்கி அருகில் நின்ற என் தமையன் தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு எங்கள் எல்லாரையும் ஆறுதல் பெறச் செய்து, நேரமாவதைக் குறித்துக் காட்டிப் பின் அவர்கள் என்னைவிட்டுப் பிரியச் செய்தான். அவர்கள் எல்லாருஞ் சென்றபிறகு, யான் தன்னந் தனியாய் இருந்து நடந்தவற்றையெல்லாம் எண்ணி ஆறாத் துயர்க்கடலில் அழுந்தினேன். உண்மையன்புடையரைப் பிரியப் பெறுதலினும் பெருந்துயர் இல்லையென இப்போதுதான் சிலதிங்களாக உணர்ந்து வருந்தீவினை உடையளானேன். முதலில் என் ஆருயிர்க்குயிரான தங்களையும் என் கண்மணியனைய தங்கையையும் பிரிந்து வரலானேன். அதன்பின் என் அருமையிற் சிறந்த மாமனாரைப் பிரிந்தேன். இப்போது இவர்களைப் பிரிந்தேன். தங்களைத் திரும்பவுங் காணப்பெறலாம் என்ற ஒரு சிறுநம்பிக்கையும், அதற்குத் துணையாய் நிற்கும் என் தமையன் உதவியுமே என்னை உயிர் பிழைத்திருக்கச் செய்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/156&oldid=1582127" இலிருந்து மீள்விக்கப்பட்டது