உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் -14

ஒவ்வொன்றும் என் செவியிற் கூரிய அம்புபோற் பாய்ந்து என் நெஞ்சத்தைக் கிழித்துச் சென்றன! இவர் சொல்லியவற்றிற் கெல்லாம் விடைசொல்ல வேண்டுமென்று என் உள்ளம் பதைபதைத்தும் என் நாவோ எழவில்லை. ஆயினும், தள்ளாத கிழவரான என் மாமனாரை அறிவு மயக்கி அவரிடம் எராளமான சொத்தைப் பிடுங்கிக் கொண்டேன் என்று இவர் கடைசியிற் சொன்ன சொல்லானது, முன்பே பேசிய இகழுரைகளாற் கிழிந்து பிளவுப்பட்ட என் நெஞ்சின் வழியே புகுந்து தேடிப்பார்த்து என் உயிரைக் கொள்ளை கொண்டுபோகுங் கூற்றுவன் கைக்கணை யாகவே தோன்றியது. அச்சம் மிகுந்த ஒரு கனவைக் கண்டு அக்கனவின் கண் ஏதுஞ் செய்யமாட்டாமற் செயலிழந்து கிடக்கும் நிலைமைக்கும் அப்போது யானிருந்த நிலைமைக்கும் ஏதும் வேறுபாடு இல்லை. அருகிலிருந்த என் அன்னையும் எனக்காக ஏதும் பரிந்து பேசாமல் சும்மா இருந்தனள். என் மாமியும் நாத்துணாரும் யான் கடிந்து பேசப்பட்டு வருந்தி யிருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியோடிருந்தார்கள். சிறு பிள்ளையான என் தங்கை மட்டுந்தான் என் நிலைமையைக் கண்டு முகம் வாடிக் கண்கலங்கினாள். இப்படியிருக்கையில் இறை வனருளால் என் அருமைத்தமையன் என்னைக் காணும் பொருட்டு அப்போது அங்கு வந்தான். வந்தவன் உடனே எங்கள் அருகில் வந்து உட்கார்ந்து எனது துன்பத்தைப் பார்த்தவுடன் தந்தையை நோக்கி,

66

'அப்பா, கோகிலம் ஏன் இவ்வளவு முகவாட்டத்தோடு இருக்கிறாளே!” என்று கேட்டான்.

நல்லநேரத்தில் என் தமையன் எனக்குச் சார்பாக வந்ததைக் கண்டு மனம்பொறாத தந்தை “நீ தான் அவளைக்கேள்” என்று சினத்தோடு கூறினார்.

66

அவள் வாட்டமாயிருக்கிறாளேயென்று உன்னைக் கேட்டேன்; உனக்குச் சொல்ல மனம் இல்லாவிட்டால் அவளையே கேட்கிறேன்!" என்று சொல்லிவிட்டு, என்னை நோக்கிக் "கோகிலா என்ன நடந்தன? ஏன் நீ இவ்வளவு வாட்டத்தோடு இருக்கின்றாய்?" என்று வினாவினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/163&oldid=1582136" இலிருந்து மீள்விக்கப்பட்டது