உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

167

உறங்குகின்றார்கள். இன்றைப் பகலிற் சிவபெருமான் பெருமை களையும், அவனடியாரும் அவர் அருளிச் செய்த நூல்களும் அவற்றை நமக்குத் தெரிவிக்கும் முறைமைகளையும் யான் எடுத்துப் பேசச் சமயம் வாய்த்ததற்கும், அவைகளை எல்லாங் கேட்டு எங்கள் பார்பபனக் குலத்துப் பெண் பிள்ளைகள் மனந்திருந்தி மகிழ்ந்து போனதற்கும் என் உள்ளம் அடங்கா மகிழ்ச்சியாற் பொங்கிற்று. அத்தையார் என்னோடு இருந்து படுக்கப்போகும்வரையில் யான் எடுத்துச்சொல்லிய உண்மை களைப் பின்னும் பின்னும் வியந்து பேசி என் தமையனி டத்துந் தம் மகளிடத்தும் அவைகளைச் சொல்லி சொல்லி மகிழ்ந் தமையால் எனக்குண்டான உள்ளக் களிப்பு மேலுக்குமேல் அளவுபடாமல் மிகுந்தது. சைவசமயத்தின் உண்மையை உணர்ந்து அதிற் பேரன்பு பூண்டொழுகுந் தங்கட்கு உடனே எழுதித் தெரிவிக்க என் உள்ளம் ஓயாது விழைந்தது. யான் இன்புறுங்கால் தாங்களும் இன்புறுதலும் யான் துன்புறுங்கால் தாங்களுந் துன்புறுதலும் இயல்பாக இருத்தலால் யான் இன்றைக்கு அடைந்த பெருங்களிப்பை என் உயிரின் உள்ளிருந்து உலவுந் தங்கட்குத் தெரியாவிட்டால் என் உயிர் அமைதி பெறுமோ! பெருமானே, இதோ! மாசற்ற வானத்தில் விளங்கும் முழுநிலா தங்கள் திருமுகத்தை போலவும் அதிலிருந்து வருங்குளிர்ந்த ஒளி தாங்கள் என்னைப் பார்த்து மகிழ்ந்து புன்சிரிப்புக் கொள்ளுங்கால் தோன்றுந் தங்கள் பற்களின் ஒளிபோலவுந் தோன்றுகின்றனவே! ஏ மதியமே, இந் நகரத்தின் கண் இவ்விரவுகாலத்தில் எல்லாம் அரவம் அடங்கி எல்லாரும் அயர்ந்துறங்கும் இப்பொழுதில் நீ மட்டுமே யான் அடையும் மகிழ்ச்சியைக்கண்டு உடன் மகிழ்கின்றாய்! இப்போது என் ஆருயிர்க்காதலன் தனித்திருந்து உனது அமுத ஒளியில் உலவினால் அவரையும் நீ காண்பாய்! இப்போது ஒருவரையொருவர் காணப் பெறாத என் இருவேமையும் நீ உயர இருந்து ஒருங்கே காணுந் தெய்வத்தன்மையுடையை யாதலால் இப்போதே என் மகிழ்வினை அவர்க்குத் தெரிவிப்பாயானால், நின் உதவியை என்றும் மறவேன்! ஆ! ஈதென்னை! தங்களை நோக்கி எழுதும் இக்கடிதத்தில் நிலவை நோக்கிப் பேசிப் பிதற்றுகின்றேனே! பெருமானே, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தங்கட்கு எழுதுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/196&oldid=1582171" இலிருந்து மீள்விக்கப்பட்டது