உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

173

யல்லாமல் நனவன்று; ஆகையால், அதில் நாம் நம்பிக்கைவைத்து வருந்துவது குழந்தைகள் இராக் காலத்தில் தம்நிழலைக் கண்டு பேய் என்று வெருள்வதையே ஒத்திருக்கின்றது. இனி, அதைப் பற்றி நினையாதே, இந்த வேனிற் காலத்து விடியற்காலம் எவ்வளவு இனியதாய் இருக்கின்றது! நாம் எல்லாருஞ் சிறிது நேரம் இந்தப் பூங்காவினுட்போய் உலவி வருவோம் வா” என்று கூறி, என்னையுந் தன் மனைவியையும் அவள் அன்னையையும் அழைத்துக் கொண்டு குடிமக்கள் தோட்டத்தினுட் சென்றான்.

உண்மையாகவே இன்று வைகறைப் பொழுது மிகவும் இனியதாகத்தான் இருந்தது. மெல்லிய தென்றற்காற்றுச் சில்லென்று மேல் வீசியது. தம் விருப்பம்போல் அக்காவினுள் இருக்கும் பலதிறப் பறவைகள் மரக்கிளைகளிலுஞ் செடிகளிலுங் கொடிகளிலுந் தாவித்தாவிப் பறந்து வைகின. அப்பறவைகளிற் சில பச்சையுஞ் சிவப்புங்கலந்து பளப்பளப்பாய்த் திகழுஞ் சிறகுகள் உடையனவாயும், வேறு சில நீலப்பட்டுப்போன்ற இறக்கைகள் உடையனவாயும் மற்றுஞ்சில மஞ்சள்நிற முடையனவாயும், பின்னுஞ்சில தூயவெண்மையும் இன்னுஞ்சில சாம்பல்நிறமும் உடையனவாயும் பார்க்கப்பார்க்க அழகாய் இருந்தன. அவற்றின் வடிவங்களும் நீண்டுங் குறுகியும் அகன்றுங் காணப்படும் அவற்றின் தோகை அமைப்புகளும் படைப்பின் திறத்தைப் புலப்படுத்தின. இத்தோட்டத்தின் நடுவே ஒரு பெரும்பகுதியை வ ளைத்து அடைத்து, அதற்குட் சில கூண்டுகளுள் வைத்திருக்கும் பலவகைப் புட்களைப் பார்ப்பதிலுந், தம் எண்ணப்படியே வெளியே திரியும் இந்தப் பறவைத் தொகுதிகளைப் பார்ப்பதே என துள்ளத்திற்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது.

பகலவன் கீழ்கடல் வட்டத்தின்மேற்றோன்றியிருக்க வேண்டும். தோட்டத்தின் உள்உள்ள மரஞ்செடி கொடிகளின் மறைப்பால் இறக்கத்தில் நிற்கும் அவனது வட்ட ஒளிவடிவு எங்கள் கண்களுக்குப் புலனாகாவிட்டாலும், கீழ்பாற்கவிந்த வானிடம் எல்லாம் பொன்நிறம் பெற்றுத் துலங்கினமையால் அத்தோற்றத்தைக் கண்டு களித்தோம். வரவரக் கதிரவன் ஒளி மரஞ்செடிகொடிகளின் பசிய இலைகளின்மேற் பட்டு மிளிர்ந்தது. தென்றற்காற்று அவ்விலைகளின்மேல் வீசும்போது அவை கலகலவென்னும் ஓர் இனிய ஒலியைச் செய்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/202&oldid=1582177" இலிருந்து மீள்விக்கப்பட்டது